
லிமாசோல்: சைப்ரஸ் நாட்டின் லிமாசோஸ் நகரில் சர்வதேச தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி யார்ராஜி பந்தய தூரத்தை 13.23 விநாடிகளில் கடந்து தேசிய சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
இதற்கு முன்னர் கடந்த 2002-ம் ஆண்டு அனுராதா பிஸ்வால் பந்தய தூரத்தை 13.38 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. சைப்ரஸ் நாட்டின் நடாலியா கிறிஸ்டோஃபி (13.34) வெள்ளிப் பதக்கமும், கிரீஸ் நாட்டின் அனீஸ் கராகியனி (13.47) வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் லில்லி தாஸ் பந்தய தூரத்தை 4:17.79 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். ஆடவர் பிரிவில் இந்தியாவின் அம்லன் போர் கோஹைன் 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
22 வயதான ஜோதி யார்ராஜி ஆந்திராவைச் சேர்ந்தவர். இவரது தந்தை சூர்யநாராயணா தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். தந்தை குமாரி வீட்டு வேலைகளையும் செய்து வருகிறார். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு தெலுங்கானாவில் உள்ள ஹக்கிம்பேட் இந்திய விளையாட்டு ஆணையத்தின் விடுதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகே ஜோதியார்ராஜியின் வாழ்க்கை மாறியது. இதன் பின்னர் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வெல்ல தொடங்கிய அவர், தற்போது சர்வதேச போட்டியிலும் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளார்.
courtesy: hindutamil