
சென்னை: இலங்கையில் நிலவும் பொருளா தார தட்டுப்பாடு காரணமாக தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் ரூ.28 கோடி மதிப்பிலான மருந்துப் பொருட்கள் அண்ணாநகரில் உள்ள மருந்துக் கிடங்கில் தயார் நிலையில் உள்ளன.
இவற்றை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக நிர்வாக இயக்குநர் தீபக்ஜேக்கப், எம்எல்ஏ எம்.கே.மோகன் உடனிருந்தனர்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அத்தியாவசியமான மருந்துகள், அவசியமான மருந்துகள் என 137 வகையான மருந்துகளை ரூ.28 கோடி மதிப்பில் இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென முதல்வர்சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
அதன்படி, முதல்கட்டமாக ரூ.8 கோடியே 87 லட்சத்து 90,593 மதிப்புள்ள 53 வகையான மருந்துகளை அட்டைப் பெட்டிகளில் பேக்கிங் செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த மருந்துகளில் 7 வகையான மருந்துகள் குளிர்சாதன நிலையிலும், 48 வகையான மருந்துகள் சாதாரண நிலையிலும் கொண்டு செல்வதற்குஏதுவாக பேக்கிங் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு பெட்டியிலும்அரசாங்கத்தின் சார்பில் எந்த விளம்பரமும் இல்லாமல், ‘இந்திய மக்களிடம் இருந்து இலங்கை மக்களுக்கு’ என்ற ஆங்கில வாசகம் மட்டும் இடம்பெற்றுள்ளது.
அண்ணா நகர் மருந்துக்கிடங்கு தமிழகத்திலேயே மிகப்பெரிய கிடங்காகும். இந்த மருந்துக்கிடங்கில் ரூ.240 கோடி மதிப்பிலான அத்தியாவசிய மற்றும் அவசியமான மருந்துப்பொருட்கள் இருப்பில் உள்ளன. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் தலா ரூ.5 கோடி மதிப்பில் மருந்துக் கிடங்குகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் நிறைவடைந்து, அங்கும் மருந்துப் பொருட்கள் இருப்பில் வைக்கப்பட இருக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
courtesy: hindutamil