
சென்னை: பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில், இந்தியாவின் முதல்அதிவிரைவு ரயிலான `டெக்கான்குயின்’ ரயிலுக்கு, நவீன ரக பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. வரும்ஜூன் மாதம் முதல் புதிய பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில் சேவை தொடங்குகிறது.
‘தக்காணத்தின் ராணி’ என அழைக்கப்படும் ‘டெக்கான் குயின்’ரயில், மும்பை மற்றும் புனே நகரங்களுக்கு இடையே தினசரி இயக்கப்படுகிறது.
பயணிகளுக்கு மிகவும் பிடித்தஇந்த ரயில், கிரேட் இந்தியன் பெனிசுலா ரயில்வே (ஜிஐபிஆர்) மூலம்,1930 ஜூன் 1-ம் தேதி வார இறுதி ரயிலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவின் முதல் அதிவிரைவு ரயில், முதல் நீண்டதூர மின்சார லோகோ இழுத்துச் செல்லும் ரயில், முதல் வெஸ்டிபுல்டு ரயில் (ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்குச் செல்லும் வசதி), உணவருந்தும் வசதி கொண்ட முதல் ரயில், பெண்களுக்கு தனிப் பெட்டி என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டது டெக்கான் ராணி ரயில்.
சுமார் 384 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கும் இந்த ரயில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (மும்பை சிஎஸ்எம்டி) மற்றும் புனே சந்திப்பை இணைக்கும் அதிவேக ரயிலாகும். சராசரியாக 120 கி.மீ. வேகத்தில் செல்லும் இது, இந்தியாவின் அதிவேக ரயில்களில் ஒன்றாகும்.
இந்த ரயிலின் அசல் மாடல்இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்டாலும், ரயில் பெட்டிகள் கிரேட் இந்தியன் தீபகற்ப ரயில்வேயின் மாதுங்கா பணிமனையில் கட்டப்பட்டன. தலா 7 பெட்டிகள் கொண்ட, இரண்டு ரேக்குகளுடன் இதன் சேவை தொடங்கப்பட்டது.
தொடக்கத்தில், குதிரைப் பந்தயத்தில் பங்கேற்கும் பணக்காரர்களை மும்பையிலிருந்து புனேவுக்கு அழைத்துச் செல்வதற்காக இந்த ரயில் இயக்கப்பட்டது. 2003-ல்இந்த ரயில் ஐஎஸ்ஓ-9001 தரச் சான்றிதழ் பெற்றது.

ஆரம்பத்தில் முதல் மற்றும் 2-ம் வகுப்பு இருக்கை வசதிகளை மட்டுமே கொண்டிருந்த இந்த ரயிலில் 1955 ஜூன் மாதம் 3-ம்வகுப்பு இருக்கை வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
1966-ல் இந்த ரயிலுக்கான பெட்டிகள், பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் கட்டப்பட்டன.மேலும், ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை 12-ஆக அதிகரிக்கப்பட்டது. தற்போது இந்த ரயிலில் 17 பெட்டிகள் உள்ளன.
இந்நிலையில், டெக்கான் குயின் ரயிலுக்கு அதிநவீன எல்எச்பி பெட்டிகள், பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப்தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஐசிஎஃப் தொழிற்சாலை அதிகாரிகள் கூறியதாவது: 2020-ல் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள், சிறந்த சஸ்பென்ஷன் அமைப்பு கொண்ட எல்எச்பி பெட்டிகளுடன் டெக்கான் குயின் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக, பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் எல்எச்பி (LHB-Linke Hofmann Busch) பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த ரயில் மணிக்கு 160 கி.மீ.வேகத்தில் ஓடக் கூடியது. 5 ஏசி இருக்கை வசதி, 12 ஏசி அல்லாத இருக்கை வசதி கொண்ட பெட்டிகள், 2 கார்டு மற்றும் பிரேக் வேன்பெட்டிகள், ஒரு விஸ்டாடோம் டூரிஸ்ட் கோச் (அகலமான ஜன்னல்கள் மற்றும் கூரை ஜன்னல்களுடன் கூடியது) மற்றும் ஒரு ஏசி வசதியுடன் கூடிய உணவருந்தும் பெட்டி(டைனிங்) ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளன.
எவ்வித அலுப்புமின்றி, சுகமாகப்பயணம் செய்வதற்கு வசதியாகவும், நவீன உட்புற அலங்காரங்கள், அழகிய மின் விளக்குகளுடன் கூடியதாக பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் உள்ள உணவருந்தும் பெட்டியில், ஒரே நேரத்தில் 40 பயணிகள் வரை அமர்ந்து உணவருந்தலாம். அத்துடன், ஏசி பெட்டியில்உள்ளதுபோல அகலமான ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மாற்றுத் திறனாளி பயணிகளின் வசதிக்காக அகலமான கதவுகள், தீத்தடுப்பு சாதனங்கள், நவீன ரக வசதிகளுடன் கூடிய கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. டெக்கான் குயின் ரயில் சேவைதொடங்கப்பட்ட 93-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு வரும் ஜூன்மாதம் எல்எச்பி பெட்டிகள் கொண்டரயில் சேவை தொடங்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
courtesy: hindutamil