
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டம் தருவை அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரி உள்ளது. இந்த கல் குவாரியில் சுமார் 300 அடி ஆழத்துக்கு தோண்டி, பாறைகள் எடுக்கப்பட்டு வந்தன. நேற்று முன்தினம் இரவில் கல்குவாரி பள்ளத்தினுள், 3 பொக்லைன் இயந்திரங்கள், 2 லாரிகள் மூலம் தொழிலாளர்கள் 6 பேர் பாறைகளை அள்ளிக் கொண்டு இருந்தனர்.
நள்ளிரவில் மேல் மட்டத்தில் இருந்து ராட்சத பாறை சரிந்து கல் குவாரி பள்ளத்தில் விழுந்தது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த முருகன், விஜய், செல்வம், மற்றொரு முருகன், ராஜேந்திரன், செல்வகுமார் ஆகிய 6 பேரும் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கினர். பாறைகள் விழுந்ததில் பொக்லைன் இயந்திரங்கள், லாரிகள் நசுங்கின.
பாளையங்கோட்டை தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். நள்ளிரவு நேரம் மற்றும் கல் குவாரியின் அடிமட்டம் வரை அமைக்கப்பட்டிருந்த பாதையில் பாறைகள் விழுந்து கிடந்ததால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது.
ராமநாதபுரம் ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமான தளத்தில் இருந்து வந்த ஹெலிகாப்டர் மூலம், மீட்புப் பணியை மேற்கொள்ள முடியாது எனத் தெரியவந்ததால் அது திரும்பிச் சென்றது.
தீயணைப்புப் படையினர் கல் குவாரி பள்ளத்துக்குள் ரோப் மூலம் இறங்கி, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த முருகன், விஜய் ஆகிய 2 பேரை மீட்டனர். பொக்லைன் இயந்திரத்தை வெட்டி, அதிலிருந்த ஓட்டுநரான செல்வம் என்பரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். 3 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் செல்வம் நேற்று இரவு உயிரிழந்தார்.
மீட்புப் பணிக்காக அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் வரவழைக்கப்பட்டனர். கல் குவாரிக்குள் வாகனங்களை பாறைகள் மூடியுள்ளதால் அவற்றில் இருந்த 3 பேர் நிலை என்ன ஆனது எனத் தெரியவில்லை.
இச்சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, குவாரிக்கு உரிமம் பெற்ற சங்கரநாராயணன் என்பவரை கைது செய்தனர். கல் குவாரி உரிமையாளர் செல்வராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.
முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.
மீட்புப் பணிகளை சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். பின்னர் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து, முதல்வர் அறிவித்த ரூ.1 லட்சம் நிதியை வழங்கினர்.
courtesy: hindutamil