Breaking News
Home / செய்திகள் / கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரான மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம்; ரோமில் போப் பிரான்சிஸ் வழங்கினார்: விழாவில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரான மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம்; ரோமில் போப் பிரான்சிஸ் வழங்கினார்: விழாவில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு நேற்று ரோமில் நடைபெற்ற விழாவில் புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் வழங்கினார். இதன் மூலம் புனிதர் பட்டம் பெற்ற முதல் தமிழர் என்ற பெருமையை தேவசகாயம் பெற்றார்.

கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலத்தைச் சேர்ந்தவர் தேவசகாயம். நீலகண்டன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் அரசவை அலுவலராக இருந்தார். மேக்கோட்டைச் சேர்ந்த பார்கவியை திருமணம் செய்துகொண்டார்.

1741-ம் ஆண்டு திருவிதாங்கூர் படைகளுக்கும், டச்சு படைகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் டச்சு தளபதி பெனடிக்ட் டிலனாய், மன்னர் மார்த்தாண்ட வர்மாவால் போர் கைதியாக சிறை பிடிக்கப்பட்டார். கத்தோலிக்கரான டிலனாயின் நண்பரானார் நீலகண்டன். பின்னர் 1745 மே 14-ம் தேதி வடக்கன்குளத்தில் திருக்குடும்ப கோயிலில் திருமுழுக்கு பெற்று நீலகண்டன் கிறிஸ்தவ மதத்தை தழுவினார். அவருக்கு லாசர் என்னும் விவிலிய பெயர் தமிழில் தேவசகாயம் என சூட்டப்பட்டது.

அதன்பின் ராஜதுரோகம், குலதுரோகம் போன்ற குற்றங்கள் சாட்டப்பட்டு, 1749 பிப்ரவரி 23-ம் தேதி தேவசகாயம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது பதவிகள் பறிக்கப்பட்டன. பல துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்ட அவர் ஏசு கிறிஸ்துவின் மீதும், அவரது போதனைகள் மீதும் பற்றுறுதியுடன் இருந்தார். அவரை யாரும் அறியாத வகையில் கொன்றுவிட திட்டமிடப்பட்டது. 1752-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி நள்ளிரவில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காற்றாடிமலையில் 5 துப்பாக்கி குண்டுகளால் தேவசகாயம் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் பாறையிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு, வனவிலங்குகளுக்கு உணவாக்கப்பட்டது.

தேவசகாயத்தின் மரணம் 3 நாட்களுக்கு பின்னரே வெளியே தெரியத்தொடங்கியது. அவரின் உடலின் எஞ்சிய பகுதிகளை மக்கள் கண்டுபிடித்தனர். அவை சேகரிக்கப்பட்டு நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் தேவாலயத்தின் பலி பீடத்துக்கு முன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்று முதல் மக்களால் தேவசகாயம் புனிதராக போற்றப்பட்டு வந்தார்.

இந்நிலையில், வாடிகனில் தேவசகாயத்தின் புனிதர் நிலை ஏற்பு கடந்த ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி நடைபெற்றது. அவரை போப் பிரான்சிஸ் புனிதராக ஏற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு மே 3-ம் தேதி ரோம் புனித பேதுரு பேராலயத்தில் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போது உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு இருந்ததால் அந்நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், வாடிகனில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் நேற்று வழங்கினார். இதன் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த முதல் புனிதர் என்ற பெருமையை தேவசகாயம் பெற்றுள்ளார். இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை மற்றும் தமிழகம், கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தேவசகாயம் புனிதர் பட்டம் பெற்றதை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட ஆரல்வாய்மொழி காற்றாடிமலை தேவாலயம், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட புனித சவேரியார் ஆலயம், அவர் சிறை வைக்கப்பட்டதாக கூறப்படும் மேலராமன்புதூரில் அமைந்துள்ள தேவாலயம் ஆகியவற்றில் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதுபோல் கோட்டாறு மறைமாவட்டம், குழித்துறை மறைமாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன

ரோமில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழர் தேவசகாயத்துக்கு ரோமில் புனிதர் பட்டம் வழங்கப்பட்ட விழாவில் கத்தோலிக்க அருட்சகோதரிகள் 6 பேர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடினர். செந்தமிழில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து, அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், ஆயர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கத்தோலிக்க நெறியில் தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கிய போதிலும், அந்நிகழ்ச்சியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து மதத்துக்கு அப்பாற்பட்டு தமிழர்களை பெருமைப்படுத்தியது. இந்தியாவில் இதற்கு முன்பு 6 பேர் புனிதர் பட்டம் பெற்றிருந்தாலும், தமிழகத்தில் முதல் புனிதர் என்ற பெருமையை தேவசகாயம் பெற்றுள்ளார்.

courtesy: hindutamil

About Admin

Check Also

“வெளுக்கும்” தாமரை.. திமுகவுக்கு மாற்று பாஜகவா?.. கமலாலயத்துக்கு மெசேஜ் தந்த “திராவிடம்”

சென்னை: எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி தந்துள்ளார்.. அத்துடன் நெத்தியடி …

Leave a Reply

Your email address will not be published.