
சென்னை: ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் மீது வேளச்சேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப் படத்தை, இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியிருந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான இப்படத்தில் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்நிலையில், ஜெய்பீம் படத்தின்சில காட்சிகளில் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்ததாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக ருத்ர வன்னியர் சேனா அமைப்பு சார்பில் சந்தோஷ் என்பவர், வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், சூர்யா, ஞானவேல் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், உரிய நடவடிக்கை எடுக்காததால், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சந்தோஷ் வழக்குத் தொடர்ந்தார். இந்நிலையில், நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் மீது வேளச்சேரி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
courtesy: hindutamil