
மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று முன்தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஹைதராபாத் அணி. 194 ரன்கள் இலக்கை விரட்டிய மும்பை அணி இறுதிக்கட்ட ஓவர்களில் வெற்றியை கோட்டைவிட்டது. நடராஜன் வீசிய 18-வது ஓவரில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்ட டிம் டேவிட் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். இது மும்பை அணிக்கு பாதகமாக அமைந்தது.
கடைசி இரு ஓவர்களில் 19 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் 19-வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார், 2-வது பந்தில் சஞ்ஜய் யாதவை (0) வெளியேற்ற, எஞ்சிய 4 பந்துகளையும் பும்ரா வீணடித்தார். இதனால் அந்த ஓவரை மெய்டனாக முடித்தார் புவனேஷ்வர் குமார். இது ஹைதராபாத் அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. கடைசி ஓவரில் 19 ரன் தேவைப்பட்ட நிலையில் மும்பை அணி போராடிய போதிலும் 15 ரன்களே சேர்க்க முடிந்தது.
போட்டி முடிவடைந்தவுடன் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறும்போது, “இறுதிக்கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்து வீசுவதே எங்களது உண்மையான பலமாக இருந்து வருகிறது.
அதிலும் புவனேஷ்வர் குமார், இறுத்திக்கட்ட பந்து வீச்சில் இந்த தொடரில் சிறந்த பந்து வீச்சாளராக உள்ளார். அவர், நம்ப முடியாதவராகவும், ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறந்தவராகவும் திகழ்கிறார். அவர் மெய்டன் ஓவர் வீசியது அற்புதமான பங்களிப்பாகும். உண்மையில் அதுவே போட்டியில் வென்ற தருணம்” என்றார்.
கடைசி ஆட்டத்தில் இல்லை…
இதற்கிடையே வில்லியம்சன் கடைசி லீக் போட்டியில் விளையாட மாட்டார் என ஹைதராபாத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வில்லியம்சனின் மனைவிக்கு 2-வது குழந்தை பிறந்துள்ளது. அவர்களை காண்பதற்காக வில்லியம்சன் நியூஸிலாந்து புறப்பட்டுச் செல்கிறார். இதனால் வரும் 22ம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிரான நடைபெறும் ஆட்டத்தில் வில்லியம்சன் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய ஆட்டம்
பெங்களூரு – குஜராத்
நேரம்: இரவு 7.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
courtesy: hindutamil