
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். சென்னை, தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இதனையடுத்து வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. இதில் தி.மு.க. தரப்பில் கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஸ்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர். மேலும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, தமிழக மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை அறிவித்தது. இன்று ப.சிதம்பரம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்று அதன்பின்பு மனுத்தாக்கல் செய்தார். அ.தி.மு.க. தரப்பில் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் சி.வி.சண்முகம், தர்மர் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
THANKS TO : DINA THANTHI