Breaking News
Home / செய்திகள் / ரோமப் பேரரசு வரலாறு: பழங்கால ரோமாபுரியின் பாம்பேய் நகரின் ஆண், பெண் எலும்புக்கூடுகளில் கிடைத்த ரகசியம்

ரோமப் பேரரசு வரலாறு: பழங்கால ரோமாபுரியின் பாம்பேய் நகரின் ஆண், பெண் எலும்புக்கூடுகளில் கிடைத்த ரகசியம்

பாம்பேய் நகர்

இத்தாலியின் ரோமப் பேரரசு காலத்திய நகரமான பாம்பேய் நகரை எரிமலை சீற்றம் அழித்தபோது புதைக்கப்பட்ட ஆண், பெண் உடல்களின் எலும்புகளில் இருந்து மரபணு ரகசியங்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

அங்கு உயிரிழந்தவர்களின் எலும்புகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட டிஎன்ஏவில் பதிந்திருக்கும் மரபணுக்கள், ‘பாம்பேய் மனித மரபணு’வுக்கான ஓரளவுக்கு முழுமையான வடிவமாக உள்ளது.

கடந்த பல்லாண்டுக் காலத்தில் மிகவும் கடினமாகிப் போன சாம்பலில் இருந்த சலடங்களில் டி.என்.ஏ பதப்பட்டிருந்தன.

இந்த கண்டுப்பிடிப்புகள் சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ் எனும் அறிவியல் ஆய்விதழில் வெளியானது.

கடந்த 1933ம் ஆண்டு இந்த உடல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன. பாம்பேய் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் அவர்களை ‘காஸா டெல் ஃபாப்ப்ரோ’ ( Casa del Fabbro) அல்லது ‘தி கிராஃப்ட்மான்’ஸ் ஹவுஸ்’ (The Craftsman’s House) என்று அழைக்கின்றனர்.

கிபி 74 ஆகஸ்ட் 24 ஆம் தேதி, அவர்கள் சாப்பிடும் அறையில் இருந்தனர். எரிமலை சீற்றம் ஏற்பட்டபோது, அவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்திருக்கலாம். வெசுவியஸ் மலையில் எரிமலை வெடித்தபோது, பெரியளவிலான சாம்பல் உருவாகி, 20 நிமிடங்களில் அந்நகர மக்களை ஆபத்துக்கு உள்ளாக்கியிருக்கலாம் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

அவர்கள் அந்த இயற்கை சீற்றத்தில் இருந்து தப்பிக்கவில்லை என்று சலெண்டா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மானுடவியலாளர் டாக்டர் செரீனா விவா கூறுகிறார்.

“அவர்களின் உடல் இருக்கும் நிலையைப் பார்க்கும்போது, அவர்கள் தப்பி ஓடவில்லை என்று தெரிகிறது. அவர்கள் ஏன் தப்பிக்க முயலவில்லை என்பதற்கான அவர்களது உடல்நிலை சார்ந்ததாக இருக்கலாம்,” என்று பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சி ஒன்றில் டாக்டர் விவா தெரிவித்தார்.

இப்போது அதற்கான சில பதில்கள், அவர்களின் இவர்களின் எலும்புகள் குறித்த புதிய ஆய்வில் கிடைத்துள்ளன.

“எலும்புக் கூடுகள் பாதுகாப்பாக இருந்தது தான் இதற்குக் காரணம். அதுதான் நாங்கள் பார்த்த முதல் விஷயம். அதோடு அது நம்பிக்கைக்குரியதாகவும் தோன்றியது. ஆகவே நாங்கள் டிஎன்ஏ-வை பிரித்தெடுக்கும் முயற்சி ஒன்றைச் செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்தோம்,” என்று இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய கோபன்ஹேகனில் உள்ள ‘லண்ட்பெக் ஜியோஜெனெடிக்ஸ்’ மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் கேப்ரியல் ஸ்கோரானோ விளக்கினார்.

டாக்டர் செரீனா விவா எலும்புக்கூடுகளில் ஒன்றை ஆய்வு செய்கிறார்.

டாக்டர் செரீனா விவா எலும்புக்கூடுகளில் ஒன்றை ஆய்வு செய்கிறார்.

அற்புதமான பாதுகாப்பு மற்றும் சமீபத்திய ஆய்வக தொழில்நுட்பம் ஆகிய இரண்டும், ஆராய்ச்சியாளர்கள் ‘சிறிய அளவிலான எலும்புத் தூளில்’ இருந்து பெரும் தகவலை திரட்ட உதவியதாக பேராசிரியர் ஸ்கோரானோ விளக்கினார்.

“புதிய மரபணு வரன்முறையிடல் இயந்திரங்களால் (New sequencing machines) ஒரே நேரத்தில் பல முழு மரபணுக்களை ஆய்வு செய்ய முடியும்,” என்று அவர் கூறினார்.

மரபணு ஆய்வில், அந்த மனிதனின் எலும்புக்கூட்டில் காசநோயை உண்டாக்கும் பாக்டீரியாவின் டி.என்.ஏ உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மேலும் ,அவரது மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் உள்ள எலும்புத் துண்டில் அவரது முழு மரபணுக் குறியீட்டையும் உருவாக்கப் போதுமான டிஎன்ஏ உள்ளது.

அவருடைய மரபணுக் குறியீடுகளும் அதிலிருந்த சில குறிப்பிட்ட அடையாளம் காணக்கூடிய மரபணுக்களும், ரோமானிய பேரரசின் காலகட்டத்திலேயே இத்தாலியில் வாழ்ந்த பிற மனிதர்களுடைய மரபணுக் குறியீடுகளோடு அவருக்கு சில ஒற்றுமைகள் இருந்ததைக் காட்டியது.

அதோடு, சார்டினியா தீவில் உள்ள மரபணுக்களில் பொதுவாகக் காணப்படும் மரபணு குறியீட்டிலும் சிலவற்றை அவர் கொண்டிருந்தார். இது அன்றைய காலகட்டத்தில், இத்தாலிய தீபகற்பம் முழுவதும் அதிகளவில் மரபணுப் பன்மை இருந்திருக்கலாம் என்பதைப் பரிந்துரைக்கிறது.

பாம்பேயின் உயிரியல் ஆய்வுகளில் இருந்து கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கும் என்று பேராசிரியர் ஸ்கோரானோ கூறினார். மேலும், பண்டைய கால டிஎன்ஏ உட்பட, அந்தக் காலகட்டத்தின் பல்லுயிரியம் பற்றியும் அதிகம் தெரிந்துகொள்ள முடியும் என்கிறார்.

மேலும், “பாம்பேய் ஒரு ரோமானிய தீவு போன்றது. எங்களிடம் கி.பி-79ஆம் ஆண்டின் ஒரு நாள் எப்படி இருந்தது என்ற ஆதாரம் உள்ளது,” என்று கூறினார்.

டாக்டர் விவா, “பாம்பேய் நகரில் இருந்த ஒவ்வொரு மனித உடலும் ‘ஒரு பொக்கிஷம்” என்றார்.

மேலும், “இவர்கள் உலகின் மிகவும் பிரபலமான வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றுக்கான மௌன சாட்சிகள். அவர்களுடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான, பெருமைக்குரிய விஷயம்,” என்று அவர் கூறினார்.

THANKS TO : BBC TAMIL

About Admin

Check Also

விக்ரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மாஸ் அப்டேட்…

எந்தவொரு தமிழ்ப் படமும் விக்ரம் அளவுக்கு விளம்பரப்படுத்தப்படவில்லை என்று கூறும் அளவுக்கு, படத்தின் புரொமோஷன் டாப் லெவலில் உள்ளது. விக்ரம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *