Breaking News
Home / செய்திகள் / சீனில் வந்த அதிமுக.. ‘ஸ்டாலின், அண்ணாமலையை ஓவர்டேக் செய்ய தயார்’ – ஓபிஎஸ் இபிஎஸ் அதிரடி திட்டம்!

சீனில் வந்த அதிமுக.. ‘ஸ்டாலின், அண்ணாமலையை ஓவர்டேக் செய்ய தயார்’ – ஓபிஎஸ் இபிஎஸ் அதிரடி திட்டம்!

சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா பேரவை பயிற்சி முகாமில், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட திமுக அரசின் உண்மை நிலையை அம்பலப்படுத்த கிராமம்தோறும் டிஜிட்டல் திண்ணை பிரச்சாரம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திமுக அரசுக்கு எதிராக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பேசி, போராட்டங்களை நடத்தி லைம்லைட்டில் இருந்து வருவதால் அதிமுகவினரிடையே அதிருப்தி நிலவி வருகிறது.

இந்நிலையில், கடந்த ஆட்சியில் ஸ்டாலின் செய்தது போல, இப்போதைய திமுக ஆட்சிக்கு எதிராக தொடர் போராட்டங்கள், திண்ணைப் பிரச்சாரங்களை நடத்த அதிமுக முடிவெடுத்துள்ளது.

ஜெ. பேரவை பயிற்சி முகாம்

ஜெ. பேரவை பயிற்சி முகாம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர்களுக்கான 2 நாள் செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்றும், இன்றும் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் நடந்த இந்த பயிற்சி முகாமை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த முகாமில், அதிமுகவின் சாதனைகள், திமுக சொல்லும் திராவிட மாடல் ஆட்சியின் உண்மை நிலை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நிர்வாகிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் திண்ணை பிரச்சாரம்

மேலும், ஜெயலலிதா பேரவை சார்பில் மாதம்தோறும் ஒரு முறையாவது கிராம, பேரூர், நகர, மாநகரங்களில் கூட்டம் நடத்தி, அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட வரலாற்று சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும். அதிமுக அரசின் திட்டங்களை முடக்கி வைத்துள்ளது பற்றியும் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருண்ட தமிழகமாக மாற்றியது குறித்தும், அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாழ்படுத்தி உள்ளது பற்றியும் கிராமங்கள்தோறும் டிஜிட்டல் திண்ணை பிரச்சாரத்தை மேற்கொண்டு அம்பலப்படுத்த வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஓவர்டேக் செய்யும் பாஜக

தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஓராண்டு காலத்தில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சிறப்பாகப் பணியாற்றவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது. பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு திமுக அரசுக்கு எதிராக தினந்தோறும் கருத்துகளை தெரிவித்து லைம்லைட்டிலேயே இருந்து கொண்டிருக்கிறார். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் எனச் செய்து பாஜகவை பிரதான எதிர்க்கட்சி போல நடத்திக் கொண்டிருப்பதாகவும், அவருடன் ஒப்பிடும்போது அதிமுக தலைவர்கள் சுணங்கிவிட்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சீனில் வந்த அதிமுக

கடந்த 10 ஆண்டுகாலமாக ஆளுங்கட்சியாக இருந்துவிட்டு இந்த முறை ஆட்சியை பறிகொடுத்திருக்கும் நேரத்தில், இந்தப் பேச்சுகள் அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இது தலைமைக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தொண்டர்களின் அதிருப்தியைக் களைந்து சுறுசுறுப்பு ஏற்படுத்தும் வண்ணம் இனி தொடர்ந்து போராட்டங்கள், கருத்துகள் என களத்திலேயே இருக்க வேண்டும் என அதிமுகவின் இரட்டை தலைமையான ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் முடிவெடுத்துள்ளனர்.

ஸ்டாலின் ஐடியா கடந்த அதிமுக ஆட்சியின்போது, தேர்தலை முன்வைத்து பல்வேறு பிரச்சார திட்டங்களை முன்னெடுத்தார் ஸ்டாலின். அதில் முக்கியமான ஒன்று மக்கள் சபை கூட்டங்கள். தொகுதிதோறும் மக்கள் சபை கூட்டங்கள் நடத்தி, அவற்றில் தானும் நேரடியாக பங்குபெற்றார் ஸ்டாலின். கிராமங்களில் கூட்டத்தைத் திரட்டி அதிமுகவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தார். மேலும், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் பிரச்சாரத் திட்டத்தின் மூலம் தொகுதிகள் தோறும் சென்று மக்களின் புகார் மனுக்களைப் பெற்று அவற்றின் மீது ஆட்சிக்கு வந்தபிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து மக்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றார்.

திமுக பாணியில் இப்போது அதே பாணியில், கிராமங்கள் தோறும் டிஜிட்டல் திண்ணைப் பிரசாரங்களை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. 2024 தேர்தலில் திமுக vs பாஜக என்கிற நிலைக்கு களம் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே வரிந்து கட்டி இறங்கத் தயாராகி வருகிறது அதிமுக. அதற்கு இந்த பிரச்சார முயற்சி வேகம் கொடுக்கும் என தலைமை திட்டமிட்டுள்ளதாம். விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் திமுகவுக்கு எதிரான போராட்டங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்படும் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லேட்டா வந்தாலும் திமுக சார்பில் கடந்த ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் எல்லா மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அதற்கு போட்டியாக, அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையில் கூட்டங்களை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. ஓராண்டு முடிவடையும் நேரத்திலேயே இதுகுறித்த திட்டம் அதிமுக தலைமையிடம் இருந்தாலும், ஓபிஎஸ் – இபிஎஸ் மோதல் போக்கு காரணமாக செயல்படுத்தப்படவில்லை என்றும், இனியும் இப்படி இருந்தால் பாஜக அதிமுகவை ஓவர்டேக் செய்துவிடும் எனக் கருதியே இப்போது வேகமாக உத்தரவுகள் பறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

THANKS TO : ONE INDIA TAMIL

About Admin

Check Also

விக்ரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மாஸ் அப்டேட்…

எந்தவொரு தமிழ்ப் படமும் விக்ரம் அளவுக்கு விளம்பரப்படுத்தப்படவில்லை என்று கூறும் அளவுக்கு, படத்தின் புரொமோஷன் டாப் லெவலில் உள்ளது. விக்ரம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *