உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென்ற என்ற கோரிக்கை எழுந்த நிலையில் அது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது “கடந்த இரு தினங்களாக டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் நீர்ஆதார பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். விவசாயிகளின் நலனுக்காகவே இந்த மின்னல் வேக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டேன். நடந்துள்ள பணிகள் மன மகிழ்ச்சியை, மனநிறைவைத் தருகிறது.
திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் ‘மகசூல் பெருக்கம்; மகிழும் விவசாயிகள்’ உள்ளிட்ட, 7 உறுதி மொழிகளைக் கூறி இருந்தேன். அந்த உறுதிமொழிகள் ஒரு வருடத்தில் நிறைவேறும் நிலையில் உள்ளது. கடைமடை வரை தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல, 68 கோடி ரூபாயில், 467 கிலோமீட்டர் தொலைவிற்கு, 647 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் கடந்தாண்டு, 4.90 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.
இதே சாதனையை இவ்வாண்டும் நிகழ்த்த திட்டமிட்டோம். பருவ மழைக்கு முன்பே, 80 கோடி ரூபாயில், 683 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கடந்த, 23ம் தேதி பணிகள் துவக்கப்பட்டு இன்றுடன் நிறைவு பெறுகின்றன. இதன் மூலம், குறுவையில், 2.5 லட்சம் ஏக்கரும், சம்பாவில், 13.05 லட்சம் ஏக்கரும் சாகுபடி பரப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஆண்டும் விளைச்சலில் சாதனை புரிவோம்.நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரப் பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கோடைக்கால பயிர் சாகுபடி அதிகரிக்கும்.
தமிழக அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி இருக்கிறது. ஆனாலும் கூட உழவர் பெருமக்கள் நலன்பெறும் வகையில், நடப்பாண்டும், 61 கோடி ரூபாயில் குறுவை தொகுப்புத் திட்டம் வழங்கப்படும். இதன் வாயிலாக, 3 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். ரூ. 47 கோடி மதிப்பிலான யூரியா, டிஏபி, பொட்டாஷ் உள்ளிட்ட ரசாயன உரங்கள் முழு மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
டிராக்டர் உள்ளிட்ட உழவுக்கருவிகள், 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்” என்றார்.
மேலும், செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், “தோட்டக்கலைத்துறை மூலமாக பட்டியலின விவசாயிகளுக்கு மட்டும், 100 சதவீத மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் படிப்படியாக வழங்க பரிசீலனை செய்வோம். தனது இருப்பை காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஏதேதோ பேசி வருகிறார். சாதி, மத மோதல்கள், வன்முறைகள் இல்லாமல், தமிழகம் அமைதி பூங்காவாக விளங்குகிறது. இதனால் தான் அதிகளவு முதலீட்டாளர்கள் தமிழகத்தை நோக்கி வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம், பணப்பலன்கள் மற்றும் ஓய்வுப் பெறும் வயது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திமுகவின் திட்டங்கள், செயல்பாடுகள், அறிவிப்புகள் குறித்து அண்ணாமலை முன்னரே தெரிவிக்கிறாரே?” என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்டாலின், “அதை வைத்து அண்ணாமலை அரசியல் செய்கிறார். நாங்கள் (திமுக) மக்களுக்கு நல்லது செய்கிறோம்” என்றார்.
இறுதியாக “உதயநிதி அமைச்சர் ஆவாரா?” என்ற கேள்விக்கு பதிலளிக்காமல், சிரித்தபடியே கிளம்பி சென்றுவிட்டார்.
தனக்கு அமைச்சர் பதவி கேட்டு யாரும் தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கக் கோரி திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் செயற்குழுவில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
THANKS TO : NEWS 18 TAMIL