சென்னை: எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி தந்துள்ளார்.. அத்துடன் நெத்தியடி பதில் இன்னொரு கட்சிக்கு இதன்மூலம் கிடைத்துள்ளது..!
இந்த முறை திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து அதிமுக தொடர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.. குறிப்பாக, திமுக மீது ஊழல் புகார்களை எடப்பாடி பழனிசாமியும், திமுக அரசின் சட்டம் ஒழுங்கு குறைபாடுகளை ஓபிஎஸ்ஸும் விடாமல் சொல்லி வருகிறார்கள்..
ஆனால் நேற்றைய தினம், சட்டம் ஒழுங்கு குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திமுகவை விமர்சித்திருந்தார்.. திமுக ஆட்சியில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது என்பன உள்ளிட்ட பல அவதூறுகளை திமுக அரசின் மீது அள்ளி வீசியிருந்தார்…

பூனை கண்ணை மூடிக் கொண்டால்..
இதற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தக்க பதிலடியை தந்திருக்கிறார்.. “காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல எடப்பாடி பழனிசாமி குறைகளை மட்டுமே கண்டு அதை பெரிதுபடுத்தி பேசி வருகிறார்.. தேர்தலில் ஏற்பட்டிருக்கும் தோல்விகளின் விரக்தியால் தன் இருப்பைக் காட்டிக்கொள்ள திமுக அரசின் மீது அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார்.. அதிமுக இருக்கிற இடம் தெரியாமல் படுத்தே விட்டது. சசிகலா கூட இதை சொல்லி இருக்கிறார்.. திமுக எத்தனையோ திட்டங்களை அறிவித்து, அதை செயல்படுத்தி வருகிறது..
அவதூறுகள்
பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டது என்பது போல எடப்பாடி பழனிச்சாமி அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார். திமுக ஆட்சியில் போதைப்பொருட்கள் நடமாட்டம் கூட இருப்பதாக எடப்பாடிபழனிசாமி கூறியிருக்கிறார். அதிமுக ஆட்சியில் எந்த அளவுக்கு பெரியது என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். யார் வீட்டில் ரெய்டு நடந்தது? அதிமுக ஆட்சியில் காவல் துறை தலைவராக இருந்தவர் மீது வழக்குப் பாயவில்லையா? என்பன உட்பட மேலும் பல்வேறு கேள்விகளை எழுப்பி, எடப்பாடி பழனிசாமிக்கும் பதில் தந்திருந்தார்.
தங்கம் தென்னரசு
ஆளும் தரப்பை எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பதும், அதற்கு ஆளும் தரப்பு முறையான பதில் அளிப்பதும் எப்போதுமே நடக்கக்கூடிய அரசியல் நடைமுறைதான்.. அதுதான் எடப்பாடி – தங்கம் தென்னரசு பேட்டிகளில் நம்மால் உணர முடிகிறது.. இன்னொன்றையும் நாம் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.. அதாவது இன்னொரு கட்சியையும் இங்கு ஒப்பிட்டு பார்க்க வேண்டி உள்ளது.. அதுதான், தமிழக பாஜக..!
பாஜக டெக்னிக்
ஒரு கட்சியை விட மேலும் சிறப்பாக செயலாற்றி, அரிய பல திட்டங்களையும் அறிவித்து, அதன்மூலம் மக்களின் மனதில் இடம் பிடிப்பது ஒரு வகை.. குற்றம் கண்டுபிடித்தே, சம்பந்தப்பட்ட கட்சியை டேமேஜ் செய்வது மற்றொரு வகை… இப்படிப்பட்ட அரசியலைதான் பாஜக கையில் எடுத்து வருகிறது..
சக எதிரிகள்
திமுக என்ன செய்தாலும் அதை விமர்சிக்க அதிமுக காத்திருக்கிறதோ இல்லையோ, பாஜக எந்நேரமும் ரெடியாகவே உள்ளது. “பேச்சு அரசியலில் அவர்களுக்கு நாங்கள்தான் எதிரி. எங்களுக்கு அவர்கள்தான் எதிரி. எங்கள் இரண்டு பேருக்கும் இடையில்தான் யுத்தம் நடக்கிறது. இது இரு முனைப் போட்டியாக சென்று கொண்டிருக்கிறது” என்று அண்ணாமலை எங்கு சென்றாலும் விடாமல் சொல்லி கொண்டே இருக்கிறார்..
கோட்டை முற்றுகை கண்டனம்,
விமர்சனங்கள் மட்டுமல்லாமல், போராட்டம், முற்றுகை என அடுத்த லெவலுக்கும் தன்னை தயார்படுத்தி கொண்டு வருகிறது தமிழக பாஜக… இதையெல்லாம் செய்துவிட்டு, திமுகவுக்கு மாற்று பாஜகதான் என்றும் தன்னை தானே அறிவித்து கொள்ளும் வினோத பழக்கத்தையும் கையாண்டு வருகிறது.. பரபரப்பு பேட்டிகள், சர்ச்சை கருத்துகள், ஆளும் தரப்புக்கு சவால் விடுவது, கெடு வைப்பது, போன்ற இயல்பான அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு டெக்னிக்கை தமிழக பாஜக கையாண்டும் வருகிறது.
ஜஸ்ட் 4 இடங்கள்தான்
இப்படியெல்லாம் செய்வதால் மட்டுமே, திமுகவுக்கு எதிரான கட்சியாக பாஜக திகழ்ந்துவிடுமா என்ற சந்தேகமும் வருகிறது.. நடந்து முடிந்த தேர்தலில் 66 இடங்களில் வென்று பலமான எதிர்கட்சியாக அதிமுக இருக்கிறது.. ஆனால் பாஜகவோ வெறும் 4 இடங்கள்தான்.. அதுகூட அதிமுகவின் தயவால் கிடைத்த அங்கீகாரங்கள் என்றே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.. அதிமுக இதுவரை 7 முறை ஆட்சியில் இருந்திருக்கிறது.. அதைவிட முக்கியமாக, 50 ஆண்டுகால பொன்விழாவை கொண்டாடி முடித்திருக்கிறது.. ஆனால், பாஜகவோ இப்போதுதான் முட்டி மோதி, மெல்ல எழுந்து வருகிறது.. அப்படி இருக்கும்போது, திமுகவுக்கு மாற்று பாஜக என்ற கூற்றை யாராலும் ஏற்க முடியாது என்பதே உண்மை.
ஏழுமலையா? அண்ணாமலையா?
அதனால்தான், திமுகவுக்கு மாற்று என்று தன்னை தானே பாஜக சொல்லி கொண்டாலும், அதை திமுக கண்டுகொள்வதே இல்லை.. திமுக மட்டுமில்லை, அதிமுகவும் அதை பெரிதுபடுத்துவதில்லை.. நேற்றைய தினம்கூட, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியே, “அண்ணாமலையா, ஏழுமலையா’ என்று குழம்பி போய் கேட்டார்.. வேண்டுமென்றே எடப்பாடி அப்படி கேட்டிருக்க மாட்டார் என்றாலும், அவர் மனசில் அண்ணாமலை என்ற பெயர் ஆழமாக பதியவில்லை என்பதே இதன்மூலம் வெளிப்பட்ட உண்மை. சட்டமன்றத்தில் யார் ஆளும்கட்சி, யார் எதிர்க்கட்சி என்றுதான் பார்க்கப்படும்..
திமுக புகார்கள்
அதைவிட முக்கியம், திமுக மீது ஏகப்பட்ட புகார்களை தினமும் பாஜக அள்ளி வீசிக் கொண்டே வந்தாலும், அதற்கு திமுக தரப்பிலிருந்து பெரிய தலைவர்கள் இதுவரை பதில் சொன்னதே இல்லை.. அதைவிட முக்கியம், அண்ணாமலை என்ற பெயரை முதல்வர் ஸ்டாலின் எங்குமே குறிப்பிட்டதாகவும் தெரியவில்லை… திமுகவுக்கு எது எதிர்க்கட்சி என்பதை மக்கள்தான் முடிவு செய்ய முடியும்.. மக்கள் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுகவைதான் வீற்றிருக்க வைத்துள்ளார்கள்.
மீம்ஸ்கள் மட்டுமே
மேலும் கள நிலவரமும் அப்படித்தான் உள்ளது. பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பாஜகவினரும், திமுக ஆதரவாளர்களும் கருத்துக்களால் மோதுவது, மீம்ஸ் போடுவது என காரசாரமாக இருந்தாலும், ஓட்டுபோடப்போகும் சாமானிய மக்களிடம், திமுகவும், அதிமுகவும்தான் ஆழப் பதிந்துள்ளது. இது தமிழக அரசுக்கும் தெரியும். உளவுத்துறையை தனது கையில் வைத்துள்ள முதல்வருக்கும் இது நன்கு தெரியும். எனவேதான் தமிழக பாஜகவை அவர் ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லை. எனவேதான் எடப்பாடி ஒரு பேட்டியளித்தார் என்றதும், அவசரமாக, தங்கம் தென்னரசு போன்ற சீனியர், பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்து பதிலளித்துள்ளார்.
“காலி பானை”
மத்தியிலும் கூட இப்படித்தான்.. காங்கிரசின் பிற தலைவர்கள் பேசினால் கண்டுகொள்ளாத மத்திய அரசு, சோனியா காந்தி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தால் பதற்றமடைவதையும், உடனே அதற்கு பதில் அல்லது பதிலடி கொடுப்பதையும் கடந்த காலங்களில் பார்த்துள்ளோம். ஆட்சியாளர்களுக்கு தெரிகிறது.. யார் முக்கியம், யார் வீண் தம்பட்டம் என்பது.. அதுதான் இதிலிருந்து கிடைக்கும் பாடம். சுயதம்பட்டம் என்றைக்குமே “காலி பானை சத்தம் போடுவதுபோலத்தான்” என்பதுதான் இந்த நிகழ்வுகளில் இருந்து கற்றுக்கொள்ளக் கூடிய பாடமாக உள்ளது.
THANKS TO : ONE INDIA TAMIL