சென்னை: பாஜகவின் மாயத்தோற்றத்தை உடைப்போம் என அதிமுக நிர்வாகி பொன்னையன் கூறியிருந்தது குறித்து பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.
அண்மைக்காலமாக பாஜக- அதிமுக இடையே வார்த்தை போரால் சலசலப்புகள் ஏற்பட்டு வந்தன. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோல்வி அடைந்தது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்திருந்தார்.
அது போல் அதிமுகவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன். ஒவ்வொரு முறையும் இது போன்ற விமர்சனங்களும் அதற்கு இரு தரப்பும் சப்பை கட்டு கட்டி பதிலளிப்பதுமாக இருந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் அதிமுக நிர்வாகி பொன்னையன் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில் பாஜக நட்பு கட்சிதான் என்றாலும் அதிமுகவின் கொள்கையோடு அக்கட்சி ஒத்து போவதில்லை. தமிழகத்தின் உரிமைக்காக பாஜக போராடவில்லை என்பது நாடறிந்த உண்மை.

பாஜக தனது கொள்கையை மாற்றி கொள்ளாத வரை தமிழகத்தில் அக்கட்சியால் வளரவே முடியாது. மாநிலம் சார்ந்த பிரச்சினைகளான காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு விவகாரங்களில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. எச்சரிக்கையுடன் அதனை சமூகவலைதளங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் விழிப்புணர்வு பணியை அதிமுக மேற்கொள்ள வேண்டும் என பேசியிருந்தார்.
வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க போகின்றன. சென்னை வந்த பிரதமர் மோடி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமியை தட்டிக் கொடுத்து கை குலுக்கி பேசியிருந்தார். இந்த நிலையில் அதிமுக நிர்வாகி இப்படி ஒரு கருத்தை கூறுகிறாரே என்ற விவாதங்கள் எழுந்தன.
பாஜக தலைவர் அண்ணாமலை
இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளிக்கையில் தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது. மடைத் திறந்த வெள்ளம் போல் பாஜகவின் வளர்ச்சி தமிழகத்தில் இருப்பது உறுதி என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் “பாஜகவின் மாயத்தோற்றத்தை உடைப்போம்.
பாஜகவை முறியடிப்போம்” – அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன் அதிமுக மற்றும் பாஜக இடையே எப்பொழுதும் நட்பு உறவை பேணி வருகிறோம். இப்போது உங்களை தூண்டியது யார்? அதாவது திமுகவுடன் அதிமுக கைகுலுக்கப் போகிறதா? எம்.ஜி.ஆருக்கும், ஜே.ஜே. அம்மாவுக்கும் எதிராக செல்வார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
THANKS TO : ONE INDIA TAMIL