4 நாளில் 3 முறை துப்பாக்கி சூடு.. டெல்லி தென்கிழக்கு டிசிபி பணியிட மாற்றம்.. தேர்தல் ஆணையம் அதிரடி.
டெல்லி: டெல்லியில் நடந்து வரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் அடுத்தடுத்து மூன்று முறை துப்பாக்கி சூடு நடந்துள்ள நிலையில் டெல்லி தென் கிழக்கு துணை போலீஸ் கமிஷ்னர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி தென் கிழக்கு துணை போலீஸ் கமிஷ்னர் சின்மோய் பிஸ்வால் அவரின் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் இந்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக தயாராகி வருகிறது. இதனால் டெல்லி போலீஸ் தற்போது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் சிஏஏவிற்கு எதிராக அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் கடந்த வாரம் உள்ளே புகுந்த நபர் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்.
அவர் இப்படி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு கல்லூரி மாணவர் கையில் காயம் அடைந்தார்.துப்பாக்கியால் சுட்ட நபரின் பெயர் ராம் பகத் கோபால். இவர் 18 வயது கூட நிரம்பாத சிறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவரை போலீசாரை 14 நாட்கள் காவலில் எடுத்துள்ளார். இந்த நிலையில் அதன்பின் இரண்டு நாட்கள் கழித்து டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலை அருகே இருக்கும் ஷாகீன் பாக் பகுதியிலும் துப்பாககி சூடு நடந்தது. அங்கு சிஏஏவிற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜாமியா மிலியா பல்கலையில் நேற்று நள்ளிரவில் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இரண்டு பேர் பைக்கில் வந்து சரமாரியாக சுட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் 4 நாட்களில் இப்படி 3 முறை அங்கு துப்பாக்கி சூடு நடந்துள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த துப்பாக்கி சூடு நடந்த ஜாமியா மிலியா பல்கலை, ஷாகீன் பாக் ஆகிய இரண்டு பகுதிகளும் தென் கிழக்கு டெல்லியில் இருக்கிறது.
இதனால் டெல்லி தென் கிழக்கு துணை போலீஸ் கமிஷ்னர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி தென் கிழக்கு துணை போலீஸ் கமிஷ்னர் சின்மோய் பிஸ்வால் அவரின் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கூடுதல் துணை கமிஷ்னர் குமார் கியானேஷ் அந்த பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.