கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திரன் கந்தசாமி என்ற இளைஞர், யார் கேட்டாலும் அவர்களின் இல்ல சுபநிகழ்வுகளில் மரக்கன்றுகளை வழங்கி வருகிறார். தனது வருமானத்தில் பெரும்பகுதியை செலவிட்டு, தன்னுடைய ஊரில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்.

பொதுவாக இயற்கை மீது காதல் கொண்டவர்கள் தங்கள் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு வருகை தரும் சுற்றத்தாருக்கு பரிசுப் பொருட்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை கிஃப்டாக வழங்குவார்கள். ஆனால், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திரன் கந்தசாமி என்ற இளைஞரோ, தனக்கு நேரடி பழக்கம் இல்லாதவர்கள் கேட்டாலும் அவர்களின் இல்ல சுபநிகழ்வுகளில் மரக்கன்றுகளை வழங்கி வருவது, இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கவனம் பெற்றிருக்கிறது.
கரூர் மாவட்டம், வ.வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்தான் நரேந்திரன் கந்தசாமி. அமெரிக்காவில் கணினி தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனது வருமானத்தில் பெரும்பகுதியை செலவிட்டு, இயற்கையை கட்டமைக்கும் காரியங்களில் ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய ஊரில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார். அதோடு, தமிழகத்திலேயே முதன்முறையாக தனது ஊரில் உள்ள பொது இடத்தில் இயற்கை முறையில் சமுதாய காய்கறித் தோட்டம் அமைத்து, அதில் விளைந்த காய்கறிகளை கொரோனா காலக்கட்டத்தில் மக்களுக்கு இலவசமாக வழங்கினார். இதைத்தொடர்ந்து, தனது பஞ்சாயத்தில் உள்ள கிராம மக்களுக்கு இலவசமாக நாட்டுரக விதைகளை வழங்கி, வீட்டுத்தோட்டம் அமைக்க வழிவகை செய்தார். இதுபோல், தமிழகத்தில் இயற்கை சார்ந்த ஆர்வலர்கள் நூற்றுக்கணக்கானவர்களுக்கு விதைகளை வழங்கியிருக்கிறார். இந்நிலையில்தான், அடுத்த முயற்சியாக சமூகவலைதளம் மூலம் தன்னை தொடர்புகொள்பவர்களின் இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு ரிட்டர்ன் கிஃப்ட்டாக மரக்கன்றுகளை வழங்க ஆரம்பித்துள்ளார்.
இதுகுறித்து, நரேந்திரன் கந்தசாமியிடம் பேசியபோது, “எங்கும் பசுமை.. எதிலும் பசுமை… இனியெல்லாம் பசுமை என்ற நோக்கில் பசுமை மாற்றத்தை வ.வேப்பங்குடியில் துவங்கி தமிழகம் முழுதும் விதைத்து வருகிறோம். இதன் அடுத்த கட்டமாகத்தான், என்னைப் பற்றி அறிந்து என்னிடம் கேட்பவர்களின் இல்ல விழாக்களில் வழங்க, மரக்கன்றுகளை எங்கள் பசுமைக்குடி அமைப்பு சார்பாக கொடுக்கத் தொடங்கியிருக்கிறோம்.
கடந்த மே மாதம் 22-ம் தேதி கரூர் மாவட்டம், மணவாசி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியையான தேன்மொழி இல்ல திருமண விழாவில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அதேபோல், எழுதியாம்பட்டி தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியையுமான கலா தம்பதியின் இல்ல திருமண நிகழ்வில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்த முயற்சியின் நோக்கம், ‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’ என்பதோடு, ‘பழமும் பெறுவோம், பணமும் சேமிப்போம்’ என்றெண்ணத்துடன் முடிந்த வரையில் பழவகை மரக்கன்றுகளை அனைத்து நிகழ்வுகளிலும் எங்கள் அமைப்பு சார்பாக வழங்கி வருகிறோம்.

Thanks to Vikatan