மதுரை காலேஜ் ஹவுஸ் உள் அரங்கத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக மதுரை மாவட்டம் மற்றும் 7 புதிய வட்டாரக் கிளைகள் தொடக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் வட்டாரப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் புதிதாக பதவி ஏற்று கொண்டனர். இந்நிகழ்விற்கு மாநில தலைவர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார்.
மாநில பொறுப்பாளர் கண்ணன் முன்னிலையில், மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாநிலத் துணைத் தலைவர் ஞானசேகரன், மாநில துணைச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மதுரை மாவட்ட தலைவர் பால் பிரின்ஸ் வரவேற்று பேசினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்டச் செயலாளர் குமரேசன் செய்திருந்தார். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட பொருளாளர் சதீஷ் நன்றியுரை கூறினார்.
இதில் மாவட்ட துணைத் தலைவர் கமலக்கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் நிவாஸ் கார்த்திக்ராஜ், மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி, மாநில செயற்குழு உறுப்பினர் அருளானந்த் மற்றும் 7 வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு செல்வது எனவும், செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் பருவ விடுமுறையின் போது மாணவர்கள் நலன் பாதிக்கப்படாமல் சென்னை டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவது எனவும், அதற்கு மதுரை மாவட்டத்தின் சார்பாக அனைத்து ஆசிரிய பெருமக்களும் குடும்பத்தோடு கலந்து கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்.