
பெரியாறு பாசனக் கால்வாய்களில் தாமதமாக தண்ணீர் திறந்ததால் மதுரை மாவட்டத்தில் எங்குமே விவசாயம் நடக்க வில்லை என்று மதுரையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டி பேசினர்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது.
இதில் டி.ஆர்.ஓ சக்திவேல், கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி, வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன்,தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ரேவதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் மாநில தலைவர் விவசாயி ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில், திருமங்கலம். கள்ளந்திரி, மேலூர் பாசனக் கால்வாய்களில் ஒரே நேரத்தில் தண்ணீர் திறக்க வேண்டும் என்றுதான் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் வைகையில் 67 அடி தண்ணீர் இருந்தும், மூன்று முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட பிறகும், பெரியாறு பாசன கால்வாய்களில் தண்ணீரை திறந்து விடவில்லை. 10 நாட்களுக்கு கால்நடைகளுக்காக கள்ளந்திரி கால்வாயில் மட்டும் தண்ணிரை திறந்தனர், மேலூர், திருமங்கலம் கால்வாய்களில் தண்ணீர்
திறக்கவில்லை. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராத காரணத்தால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நீதிமன்றம் கேட்டபோது, அவர்கள் 2 குறிப்பிட்ட சங்க நிர்வாகிகள் கண்மாய்களில் தண்ணீர் இருப்பதால் தண்ணீர் திறக்க வேண்டாம் என கடிதம் தந்ததால் திறக்கவில்லை என்றனர். விவசாயிகளுடன் பேசிக் கொண்டே விவசாயிகள் சங்க நிரவாகிகள், விவசாயிகளுக்கு எதிராகவும், அதிகாரிகளுக்கு ஆதரவாகவும், பெரியாறு பாசன கால்வாய் தண்ணீர் திறப்பு விவகாரத்தில் செயல்பட்டுள்ளது தெளிவாகிவிட்டது.
விவசாயிகள் கருத்தை கேட்காமல் சங்க நிர்வாகிகள் கருத்தை அதிகாரிகள்
எப்படி கேட்கலாம். இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்தனர். எனவே அடுத்த முறை விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு முடிவு எடுக்க வேண்டும் என பேசினார்.