விசாகப்பட்டினம் : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்வி உறுதி என்றே தெரிந்தே தான் தோனி களமிறங்கியதாக முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு தெரிவித்துள்ளார்.
17வது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி முதல் தோல்வியை டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி ரிஷப் பண்ட் மற்றும் டேவிட் வார்னரின் அதிரடியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை சேர்த்து தோல்வியடைந்தது.
இருப்பினும் கடந்த 2 போட்டியில் சிஎஸ்கே அணி பெற்ற வெற்றியை விடவும், இந்த போட்டியில் சென்னை அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஏனென்றால் சிஎஸ்கே அணியின் தல தோனி, 307 நாட்களுக்கு பின் மீண்டும் சிஎஸ்கே அணிக்காக மஞ்சள் ஜெர்சியில் களமிறங்கி ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார். இதனால் தோல்வியை பற்றி கூட சிந்திக்காமல் சிஎஸ்கே அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தோனியின் ஆட்டம் குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு பேசுகையில், தோனியின் இந்த ஆட்டத்திற்கு பின் எனக்கு சில விஷயங்கள் தோன்றுகிறது. இனிமேல் தோனி நம்பர் 8ல் களமிறங்க மாட்டார் என்று தோன்றுகிறது. நிச்சயம் நம்பர் 6ல் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அவர் களமிறங்கும் போது ஆட்டம் கைமீறி போய்விட்டது என்று நிச்சயம் புரிந்திருக்கும்.
அதனால் தோனி இந்த போட்டியை பயிற்சி களமாகவே பார்த்திருப்பார். ஏனென்றால் பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் இதுபோன்ற சூழல் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பது தோனிக்கு நன்றாக தெரியும். அதனால் தோனி தயாராவதற்காக இந்த போட்டியை பயன்படுத்தி கொண்டுள்ளார். சிறந்த பவுலர்களுக்கு எதிரான யார்க்கர் போன்ற கடினமான பந்துகளை எதிர்கொண்டு ரன்கள் சேர்க்க முடிகிறதா என்று அவருக்கு அவரே சோதனை செய்து பார்த்திருப்பார்.
இந்த இன்னிங்ஸிற்கு பின் தோனி முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க முடிந்தது. நிச்சயம் அவர் நம்பிக்கை அதிகரித்திருக்கும். இந்த இன்னிங்ஸிற்கு பின் ஒவ்வொரு அணிகளும் நிச்சயம் பீதியடைந்திருப்பார்கள். கடைசி 5 ஓவர்களில் இனி தோனி வருவார் என்று அச்சம் எழுந்திருக்கும். 2005ல் இருந்து பார்த்த தோனியை மீண்டும் பார்க்க போகிறோம் என்று நிச்சயம் நினைப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.