சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் பணியாளர் பற்றாக் குறையைப் போக்க விரைவில் 5,500 பேர் தேர்வு செய்யப்பட்டு, நகராட்சிகளில் நியமனம் செய்யப்படவுள்ளார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ஆண்டுதோறும் ரூ,1,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை 2.05 லட்சம் பேருக்கு வேலைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
சென்னை உள்ளிட்ட 11 மாநகராட்சிகளில் சீர்மிகு நகரத்திட்டம் ரூ,10 ஆயிரத்து 890 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. சென்னை தவிர 20 மாநகராட்சிகள் மற்றும் 138 நகராட்சிகளில் 11 ஆயிரத்து 872 கி.மீ. நீளமுள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைக்க உத்தரவிடப்பட்டு, 4 ஆண்டுகளில் பணியை முடிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேக்கத்திடக்கழிவுகளை அகற்றி அந்த நிலங்களில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் மரங்களை நட்டு வளர்க்க திட்டமிடப்பட்டது. 41 உள்ளாட்சி அமைப்புகளில் மீட்கப்பட்ட நிலங்களில் இதுவரை 56 ஆயிரத்து 958 மரங்கள் நடப்பட்டு உள்ளது.
தாம்பரம், ஆவடி, கடலூர் மாநகராட்சிகள் மற்றும் மாங்காடு, குன்றத்தூர், திருவேற்காடு, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம் கூடுவாஞ்சேரி, பூந்தமல்லி, பொன்னேரி மற்றும் திருவேற்காடு நகராட்சிகளில் வெள்ள பாதிப்புகளை தடுக்க 74 மழைநீர் வடிகால் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாநகராட்சி சங்கரப்பேரி, பண்டாரம்பட்டி, மீளவிட்டான், தூத்துக்குடி புறநகர் மற்றும் முத்தையாபுரம் போன்ற பகுதிகளில் பெரும் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில், இதுவரை 43.09 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதி 4-ல் முதற்கட்ட பணிகள் தொடங்கி இருக்கிறது.
3 ஆண்டுகளில் 13 ஆயிரத்து 387 கி.மீ. நீள சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கொசஸ்தலை ஆறு மற்றும் சென்னையைச் சுற்றி 2,641 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, 669 கி.மீ. நீளப் பணிகள் நடைபெறுகின்றன. 28 பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெறுகிறது.
7.42 லட்சம் தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. 100 பஸ் நிலைய பணிகள் நடைபெறுகின்றன. 62 சந்தைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 86 இடங்களில் சந்தைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது
79 அறிவுசார் மையங்களுக்குக் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, 21 அறிவுசார் மையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 681 பூங்கா அபிவிருத்தி பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும் 396 பூங்கா மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகிறது.
நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு, கரைகளைப் பலப்படுத்தப்படுத்தி சீரமைக்கப்பட்டுள்ளன. புதிய மின் மயானங்கள் அமைத்தல், நவீனப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. பள்ளிகளுக்குக் கூடுதல் வகுப்பறை கட்டிங்கள் கட்டப்பட்டுள்ளன. 72 ஆயிரத்து 214 தனி நபர் கழிவறைகளும் 2,081 சமுதாயக் கழிப்பிடங்களும் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் பணியாளர் பற்றாக் குறையைப் போக்க விரைவில் 5,500 பேர் தேர்வு செய்யப்பட்டு, நகராட்சிகளில் நியமனம் செய்யப்படவுள்ளனர். நகராட்சி நிர்வாகத்துறையின் பணிகளால் நகரமயமாக்கலில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது” இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.