புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு வந்த ரூ.14.40 லட்சத்திற்கு கணக்கு காட்டததால் ரூ.285 கோடி நிதியை வருமானவரித்துறை முடக்கி உள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, சோனியா குற்றம் சாட்டி உள்ளனர்.
2018-2019ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததாக கூறி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த பிப்ரவரி மாதம் திடீரென வருமானவரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர். அதில் தகவல் முரண்பாடு இருப்பதாக கூறி வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் கடந்த மாதம் முடக்கினார்கள்.
கட்சியின் 11 கணக்குகளில் 8 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.285 கோடி நிதி உள்ளது. மேலும் 45 நாட்கள் தாமதமாக வருமான வரி தாக்கல் செய்ததற்காக அபராதமும் விதிக்கப்பட்டது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் உள்நோக்கத்துடன் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பிரதமர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கார்கே, ‘மக்களவை தேர்தலில் சமநிலையை உறுதிப்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை செயல்பட அனுமதிக்க வேண்டும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெற வேண்டுமானால் முடக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை அணுகுவதற்கு அனுமதிக்க வேண்டும் என அரசியலமைப்புக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன் ” என்றார்
இதனை தொடர்ந்து பேசிய கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, ”ஜனநாயக கட்டமைப்பை பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் எதுவும் நடக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து வலுகட்டாயமாக பணம் எடுக்கப்படுகின்றது. ஒரு பக்கம் தேர்தல் பத்திரங்கள் பாஜவிற்கு மிகப்பெரிய பயனளித்துள்ளது. மறுபுறம் முக்கிய எதிர்கட்சிகளின் நிதி உறுதியாக தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கியது மக்களவை தேர்தல் நேரத்தில் கட்சியை பலவீனப்படுத்துவதற்கான பிரதமர் மோடியின் திட்டமிட்ட முயற்சியாகும்.
இந்த சவால்களுக்கு மத்தியிலும் எங்கள் பிரசாரத்தின் செயல்திறனை தக்கவைப்பதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது. இது காங்கிரஸ் கட்சியை மட்டுமல்ல இந்தியாவின் ஜனநாயகத்தையும் பாதிக்கும்” என்றார். காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கென் கூறுகையில், ”எங்களது வங்கி கணக்குகளை முடக்கியதன் மூலமாக கட்சிக்கு பொதுமக்கள் அளித்த நன்கொடைகளை பாஜ கொள்ளையடித்துள்ளது.
வலுகட்டாயமாக வங்கி பணத்தை எடுத்துக்கொண்டுள்ளது. வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்பாயத்திடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. மார்ச் 8ம் தேதி காங்கிரஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் ரூ.285 கோடி வரவு உள்ள காங்கிரஸ் வங்கி கணக்கை வருமானவரித்துறை முடக்கியது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தும் நிவாரணம் கிடைக்கவில்லை.
இந்த நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் எந்தவித விளம்பரம், தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி திண்டாடியது. 1994-95 காலகட்டத்தில் சீத்தாராம் கேசரி பதவிக்காலத்தில் அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கணக்கிற்கு வருமானவரி தாக்கல் தொடர்பாக கடந்தவாரம் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
வருமானவரி விதிகளின் படி தாமதாக தாக்கல் செய்தால் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ஆனால் கணக்குகளில் முரண்பாடு பிரச்னைக்கு வெறும் 7 பைசாவுக்கு ரூ.106 தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.14 லட்சத்து 40 ஆயிரம் கணக்கில் வரவு வராததற்கு ரூ.210 கோடி அபராத தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வருமான வரி கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரசுக்கு மட்டும் ஏன் தண்டனை விதிக்கப்படுகிறது’ என்றார்.
* 2 ரூபாயை கூட எங்களால் செலவழிக்க முடியவில்லை ராகுல்காந்தி வேதனை
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது: உங்களது வங்கி கணக்கு, ஏடிஎம் அட்டை, மொத்த நிதி அடையாளம் அழிக்கப்பட்டுவிட்டது என்று நினைத்துப்பாருங்கள். அல்லது அழிக்கப்பட்டுவிட்டது என்று நினைத்துப்பாருங்கள். இது ஒரு குடும்பத்திற்கு நிகழ்ந்தால் அவர்கள் பட்டினி கிடப்பார்கள். வியாபாரத்திற்கு நிகழ்ந்தால் அந்த வியாபாரம் முடங்கிப்போகும். இதுதான் ஒரு மாதத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு நிகழ்த்தப்பட்டது. எங்களின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.
பிரசாரம் செய்ய முடியாது. தொண்டர்களுக்கோ அல்லது வேட்பாளர்களுக்கோ உதவ முடியாது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விமானத்தில் செல்ல முடியாது. விமானத்தில் செல்வதை விடுங்கள். ரயிலில் கூட செல்ல முடியாது. தேர்தல் பிரசாரத்திற்கு 2 வாரத்திற்கு முன்பு இது செய்யப்பட்டுள்ளது. ஆச்சர்யமானது என்னவென்றால் இந்த நாட்டில் ஏராளமான அமைப்புகள் உள்ளன. அவை ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். நீதிமன்றங்கள் உள்ளன. தேர்தல் ஆணையம் உள்ளது. ஆனால் எதுவும் நடக்கவில்லை.
பொறுங்கள், நாட்டின் பெரிய கட்சிகளுள் ஒன்றின் வங்கி கணக்கை முடக்கியிருக்கிறீர்கள் என்று கூட தேர்தல் ஆணையம் சொல்லவில்லை. தேர்தலில் போட்டியிடும் எங்களின் திறன் ஏற்கனவே பாதிக்கப்பட்டுவிட்டது. இந்த போராட்டத்தில் ஏற்கனவே ஒரு மாதம் போய்விட்டது. விளம்பரம் செய்ய முடியவில்லை. செய்தித்தாள்களில்விளம்பரம்கொடுக்கமுடியவில்லை. இது என்ன மாதிரியான ஜனநாயகம்.
காங்கிரஸ் மீது செய்யப்படும் தாக்குதல் இது. இந்த தாக்குதல் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரால் செய்யப்படுகிறது. இந்தியா ஜனநாயக நாடு என்பது பொய். இந்தியாவில் தற்போது ஜனநாயகம் என்பதே இல்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது பொய். முற்றிலும் பொய். 20 சதவீத இந்தியா எங்களுக்கு வாக்களித்து இருக்கிறது. ஆனால் 2 ரூபாயை கூட எதற்கும் எங்களால் செலவழிக்கமுடியவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.