சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் இதர கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளனர்.
முன்னதாக கள்ளக்குறிச்சி சென்ற தமிழக அமைச்சர்கள் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டையே பதறவைத்துள்ளது கள்ளக்குறிச்சியின் மரண ஓலம். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு ஏற்கனவே ரூ10 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளது. இதற்கு தேமுதிக, நாம் தமிழர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாஜகவும் ரூ1 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் முதல் கடைநிலை போலீசார் வரை பல்வேறு தரப்பினர் மீது தமிழக அரசு அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யபட்டு விவாதம் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகளும் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளன. இது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளன.
அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விரிவான பதிலைத் தரக் கூடும். முன்னதாக கள்ளக்குறிச்சி சென்றுள்ள தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய குழு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது. இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் விரிவான பதிலைத் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நேற்று தமிழக சட்டசபையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.