டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலம் ஏற்பட்ட ரயில் விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இதன் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேநேரம் நமது நாட்டில் ரயில் விபத்துகள் என்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் ஏற்படும் ஏழாவது ரயில் விபத்து இதுவாகும். இதனால் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இன்றைய தினம் ஜார்க்கண்ட் மாநிலம் சக்ரதார்பூர் அருகே பாரபம்பு என்ற கிராமத்தில் மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து மகாராஷ்டிர தலைநகர் மும்பைக்குச் சென்ற ஹவுரா- சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன.
ரயில் விபத்து: இந்த விபத்தில் 2 பயணிகள் உயிரிழந்தனர்.. மேலும் 40 பயணிகள் படுகாயமடைந்தனர். அப்பகுதியில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்தில் காயமடைந்தோர் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விபத்தால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு ரயில் பாதைகளில் மீண்டும் ரயில் போக்குவரத்தைத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேநேரம் நமது நமது நாட்டில் ரயில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் நமது நாட்டில் ரயில் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
மேற்கு வங்க ரயில் விபத்து: கடந்த மாதம் 17ம் தேதி மேற்கு வங்கத்தில் மிக மோசமான ரயில் விபத்து ஏற்பட்டது. அன்றைய தினம் காலை 9 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள ரங்கபாணி ரயில் நிலையம் அருகே கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது என்ற மீது சரக்கு ரயில் மோதியது. இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.. மேலும், சுமார் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அடுத்த ஒரே மாதத்தில் உத்தரப் பிரதேசத்தில் மிக மோசமான விபத்து ஏற்பட்டது. கடந்த ஜூலை 18ம் தேதி திப்ருகர் எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கியது. உத்தரப் பிரதேசத்தின் கோண்டாவில் திப்ருகர் எக்ஸ்பிரஸின் பல பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 20 பேர் காயமடைந்தனர். விபத்துக்கு முன்பு மிகப் பெரிய ரத்தம் கேட்டதாக ரயில் டிரைவர் கூறியிருந்தார். அது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தொடரும் விபத்துகள்: அதற்கு மறுநாள் ஜூலை 19ம் தேதி குஜராத் மாநிலம் வல்சாத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது. மறுநாள் ஜூலை 20ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹாவில் சரக்கு ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. மேலும், ஜூலை 21ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கின. அதேநாளில் மேற்கு வங்க மாநிலம் ரணகாட்டில் மற்றொரு சரக்கு ரயில் தடம் புரண்டது.
ஜூலை 26ம் தேதி ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்ட நிலையில், ஜூலை 29ம் தேதி பீகார் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் பீகாரின் சமஸ்திபூரில் சில பெட்டிகள் ரயில் என்ஜினில் இருந்து தனியாக பிரிந்தன. நல்வாய்ப்பாக இந்த விபத்துகளில் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.
என்ன காரணம்: இருப்பினும், நமது நாட்டில் இதுபோல ரயில் விபத்துகள் தொடர்கதையாகி இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. விபத்துகளைத் தடுக்க கவாச் தொழில்நுட்பத்தை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியது. இந்த கவாச் தொழில்நுட்பம் ஒரே ரயில் பாதையில் இரண்டு ரயில்கள் வருவதைத் தடுக்கும்.. இருப்பினும், நாடு முழுக்க அதைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதே விபத்து தொடர்கதையாகக் காரணமாக இருக்கிறது.