சிவகங்கை மேலமங்கத்தில் வசித்து வரும் கனரக ஊர்தி ஓட்டுநரான ஜோர்ஜ் டோமினிக்(49)அவர்கள் கடந்த மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார்.
இவரது மூத்த மகனான அலோசியஸ் என்பவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பெட்ரோலியம் என்ஜினியரிங் துறையில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார். மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பமாக இருந்தாலும் தன் மகனை படிப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தந்தை இரவு பகலாக வேலை செய்து இவரது படிப்பிற்கான செலவுகளை கவனித்து வந்தார்.
திடீரென ஜோர்ஜ் டோமினிக் மாரடைப்பால் மரணமடைந்த காரணத்தினால், அவருடைய மூத்த மகனான அலோசியஸ் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டார்.
இதை அறிந்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் அவர்கள், சிங்கப்பூரில் செயற்பட்டு வரும் தொண்டு நிறுவனமான குரு சித்தம் பெருங்குடில் அமைப்பின் நிறுவனர் முனைவர் மணிவண்ணன் நாச்சியப்பன் அவர்களிடம் இந்த மாணவனின் நிலையைப் பற்றித் தகவல் தெரிவித்தார்.
மாணவனின் குடும்ப நிலையைக் கேட்டறிந்த முனைவர் மணிவண்ணன் நாச்சியப்பன் மாணவனின் கல்விக் கட்டணம் முழுவதையும் பொறுப்பேற்று ஒரு இலட்சம் ரூபாயை நன்கொடையாக அனுப்பி வைத்தார்.
இப்பணத் தொகையினை கடந்த ஞாயிறு அன்று மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து முனைவர் நீலமேகம் நிமலன் அவர்கள் அந்த மாணவனின் தாயார் செல்வியிடம் வழங்கினார். நிதியுதவியை பெற்றுக் கொண்ட அவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், நிகழ்வில் பங்கு கொண்ட 600 ற்கும் மேற்பட்டவர்களிடம் பேசிய முனைவர் நீலமேகம் நிமலன் மாரடைப்பு வராமல் தடுப்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இளைஞர் குரல் செய்தியாளர் மதுரை கனகராஜ்