அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளரும், தென்மண்டல பொறுப்பாளருமான தலைமை கழக தேர்தல் பிரிவு செயலாளர் நெல்லை மேட்டுப்பட்டி டாக்டர் முத்துக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது :-
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக திமுக தலைமையில் அனைத்து கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் தென்காசி(தனி) வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் அமோக வெற்றி பெற அதிமமுக தலைமை கழக நிர்வாகிகள், மாநில,மாவட்ட,நகர ஒன்றிய,பேரூர் கழக கிளை கழக சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்புக் கொடுத்து நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு வந்த ரூ.14.40 லட்சத்திற்கு கணக்கு காட்டததால் ரூ.285 கோடி நிதியை வருமானவரித்துறை முடக்கி உள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, சோனியா குற்றம் சாட்டி உள்ளனர்.
2018-2019ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததாக கூறி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த பிப்ரவரி மாதம் திடீரென வருமானவரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர். அதில் தகவல் முரண்பாடு இருப்பதாக கூறி வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் கடந்த மாதம் முடக்கினார்கள்.
கட்சியின் 11 கணக்குகளில் 8 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.285 கோடி நிதி உள்ளது. மேலும் 45 நாட்கள் தாமதமாக வருமான வரி தாக்கல் செய்ததற்காக அபராதமும் விதிக்கப்பட்டது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் உள்நோக்கத்துடன் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பிரதமர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கார்கே, ‘மக்களவை தேர்தலில் சமநிலையை உறுதிப்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை செயல்பட அனுமதிக்க வேண்டும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெற வேண்டுமானால் முடக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை அணுகுவதற்கு அனுமதிக்க வேண்டும் என அரசியலமைப்புக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன் ” என்றார்
இதனை தொடர்ந்து பேசிய கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, ”ஜனநாயக கட்டமைப்பை பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் எதுவும் நடக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து வலுகட்டாயமாக பணம் எடுக்கப்படுகின்றது. ஒரு பக்கம் தேர்தல் பத்திரங்கள் பாஜவிற்கு மிகப்பெரிய பயனளித்துள்ளது. மறுபுறம் முக்கிய எதிர்கட்சிகளின் நிதி உறுதியாக தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கியது மக்களவை தேர்தல் நேரத்தில் கட்சியை பலவீனப்படுத்துவதற்கான பிரதமர் மோடியின் திட்டமிட்ட முயற்சியாகும்.
இந்த சவால்களுக்கு மத்தியிலும் எங்கள் பிரசாரத்தின் செயல்திறனை தக்கவைப்பதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது. இது காங்கிரஸ் கட்சியை மட்டுமல்ல இந்தியாவின் ஜனநாயகத்தையும் பாதிக்கும்” என்றார். காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கென் கூறுகையில், ”எங்களது வங்கி கணக்குகளை முடக்கியதன் மூலமாக கட்சிக்கு பொதுமக்கள் அளித்த நன்கொடைகளை பாஜ கொள்ளையடித்துள்ளது.
வலுகட்டாயமாக வங்கி பணத்தை எடுத்துக்கொண்டுள்ளது. வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்பாயத்திடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. மார்ச் 8ம் தேதி காங்கிரஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் ரூ.285 கோடி வரவு உள்ள காங்கிரஸ் வங்கி கணக்கை வருமானவரித்துறை முடக்கியது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்தும் நிவாரணம் கிடைக்கவில்லை.
இந்த நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் எந்தவித விளம்பரம், தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி திண்டாடியது. 1994-95 காலகட்டத்தில் சீத்தாராம் கேசரி பதவிக்காலத்தில் அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கணக்கிற்கு வருமானவரி தாக்கல் தொடர்பாக கடந்தவாரம் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
வருமானவரி விதிகளின் படி தாமதாக தாக்கல் செய்தால் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ஆனால் கணக்குகளில் முரண்பாடு பிரச்னைக்கு வெறும் 7 பைசாவுக்கு ரூ.106 தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.14 லட்சத்து 40 ஆயிரம் கணக்கில் வரவு வராததற்கு ரூ.210 கோடி அபராத தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வருமான வரி கட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரசுக்கு மட்டும் ஏன் தண்டனை விதிக்கப்படுகிறது’ என்றார்.
* 2 ரூபாயை கூட எங்களால் செலவழிக்க முடியவில்லை ராகுல்காந்தி வேதனை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது: உங்களது வங்கி கணக்கு, ஏடிஎம் அட்டை, மொத்த நிதி அடையாளம் அழிக்கப்பட்டுவிட்டது என்று நினைத்துப்பாருங்கள். அல்லது அழிக்கப்பட்டுவிட்டது என்று நினைத்துப்பாருங்கள். இது ஒரு குடும்பத்திற்கு நிகழ்ந்தால் அவர்கள் பட்டினி கிடப்பார்கள். வியாபாரத்திற்கு நிகழ்ந்தால் அந்த வியாபாரம் முடங்கிப்போகும். இதுதான் ஒரு மாதத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு நிகழ்த்தப்பட்டது. எங்களின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.
பிரசாரம் செய்ய முடியாது. தொண்டர்களுக்கோ அல்லது வேட்பாளர்களுக்கோ உதவ முடியாது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விமானத்தில் செல்ல முடியாது. விமானத்தில் செல்வதை விடுங்கள். ரயிலில் கூட செல்ல முடியாது. தேர்தல் பிரசாரத்திற்கு 2 வாரத்திற்கு முன்பு இது செய்யப்பட்டுள்ளது. ஆச்சர்யமானது என்னவென்றால் இந்த நாட்டில் ஏராளமான அமைப்புகள் உள்ளன. அவை ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். நீதிமன்றங்கள் உள்ளன. தேர்தல் ஆணையம் உள்ளது. ஆனால் எதுவும் நடக்கவில்லை.
பொறுங்கள், நாட்டின் பெரிய கட்சிகளுள் ஒன்றின் வங்கி கணக்கை முடக்கியிருக்கிறீர்கள் என்று கூட தேர்தல் ஆணையம் சொல்லவில்லை. தேர்தலில் போட்டியிடும் எங்களின் திறன் ஏற்கனவே பாதிக்கப்பட்டுவிட்டது. இந்த போராட்டத்தில் ஏற்கனவே ஒரு மாதம் போய்விட்டது. விளம்பரம் செய்ய முடியவில்லை. செய்தித்தாள்களில்விளம்பரம்கொடுக்கமுடியவில்லை. இது என்ன மாதிரியான ஜனநாயகம்.
காங்கிரஸ் மீது செய்யப்படும் தாக்குதல் இது. இந்த தாக்குதல் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரால் செய்யப்படுகிறது. இந்தியா ஜனநாயக நாடு என்பது பொய். இந்தியாவில் தற்போது ஜனநாயகம் என்பதே இல்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது பொய். முற்றிலும் பொய். 20 சதவீத இந்தியா எங்களுக்கு வாக்களித்து இருக்கிறது. ஆனால் 2 ரூபாயை கூட எதற்கும் எங்களால் செலவழிக்கமுடியவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.
சென்னை: பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் முடிவு எடுக்க ஆளுநருக்கு 24 மணி நேரம் கெடு விதித்திருந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் மீண்டும் அவருக்கு அவர் வகித்துவந்த உயர்கல்வித் துறையே ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அந்தத் துறை ராஜகண்ணப்பன் வசம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கு, தண்டனை, தடை: தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, கடந்த 2006-11 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் கடந்த 2011-ம்ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுதலை செய்து விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்தவழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அமைச்சராக பதவி வகித்த பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து கடந்த டிச.19-ம் தேதி தீர்ப்பளித்தது. இதனால் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனது.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்தவழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தும், பொன்முடியை குற்றவாளி என அறிவித்த தீர்ப்புக்கு தடை விதித்தும் உத்தரவிட்டது.
முதல்வரின் பரிந்துரையும், ஆளுநரின் நிராகரிப்பும்: இதனையடுத்து எம்எல்ஏவாக பொன்முடி தொடர்ந்து நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க கோரி,அதற்கான பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார். ஆனால், ஆளுநர் அந்த பரிந்துரையை நிராகரித்தார்.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘ஆளுநரின் செயல் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ஜனநாயக முறைப்படி மனுதாரருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு முதல்வர் பரிந்துரை செய்துள்ளார். அதை ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும். முதல்வரின் தனிப்பட்ட அதிகாரத்தில் ஆளுநர் எப்படி தலையிட முடியும். இந்த விவகாரத்தில் ஆளுநர் தனது முடிவை 24 மணி நேரத்துக்குள் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், எங்களது நடவடிக்கை என்ன என்பதை இப்போது நாங்கள் கூறப்போவது இல்லை’ என்று கெடு விதித்தது. இந்நிலையில் இன்று மாலை பொன்முடிக்கு ஆளுநர் ரவி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் தலைவர்களில் ஒருவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் நேற்றிரவு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கைது நடவடிக்கையை எதிர்த்து அவர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வருகிறது.
கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார்.
இந்த குற்றச்சாட்டில், மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து அரசின் தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆளுநர் சக்சேனா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேட்டு கொண்டார். அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். மறுபுறம் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பண பரிமாற்றம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. விசாரணைக்காக கெஜ்ரிவாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஒரே ஒரு சம்மனுக்கு கூட பதிலளிக்கவில்லை. நேரில் ஆஜரானால் கைது உறுதி என்பது தெரிந்த விஷயம்தான். எனவே, ஆஜராவதை தவிர்த்து வந்தார்.
அதே நேரம், அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தையும் நாடியிருந்தார். அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்ப தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனையடுத்து இன்று புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், “விளைவு ஏற்படுத்தக்கூடிய வகையிலான கட்டாய நடவடிக்கை ஏதும் தனக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். நான் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினால், தன்னை கைது செய்யமாட்டோம் என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதி அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.
ஆனால் கெஜ்ரிவாலின் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனையடுத்து நேற்றிரவு கையில் கைது வாரண்ட்டுடன் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்டு அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். இறுதியாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை போன்று கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக அமலாக்கத்துறையினர் நடவடிக்கைக்கு எதிராக அவர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று இரவு விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிறப்பு விசாரணை குழு எதையும் உச்சநீதிமன்றம் அமைக்கவில்லை. இந்நிலையில் இன்று இந்த மனு இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வருகிறது.
உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தை பாதுகாக்கும் என்று கூறியுள்ள அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினரால், கெஜ்ரிவாலுக்கு எதிராக ஒரு ரூபாயை கூட கைப்பற்ற முடியவில்லை என்று விமர்சித்துள்ளார். கடந்த 2 மாதங்களில் 2வது முதலமைச்சரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி: லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் பாரபட்சமின்றி நடத்தப்படுவது ஜனநாயகத்திற்கு அவசியமானது.
அதேபோல காங்கிரஸின் வங்கி கணக்கு திட்டமிட்டு முடக்கப்பட்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 2019ம் ஆண்டை போலவே, 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றாக வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. காங்கிரஸை பொறுத்த அளவில் இரண்டு கட்டங்களாக ஏற்கெனவே வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இன்று காலை டெல்லியில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதில், தேர்தல் ஜனநாயக முறையில் நடத்தப்படுவது அவசியம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தியுள்ளார். பேட்டியின்போது அவர் பேசுகையில்,
“தேர்தல் பாரபட்சமின்றி நடத்தப்படுவது ஜனநாயகத்திற்கு அவசியமானது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுவதற்கு சமநிலையில் வாய்ப்பு இருக்க வேண்டும். தேர்தல் பத்திர முறைகேடு சர்வதேச அளவில் இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டது. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்படுகின்றன” என்று மத்திய அரசின் மீது விமர்சனங்களை அடுக்கினார்.
இவரை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “30 ஆண்டுகளுக்கு முந்தைய பிரச்னைக்காக தற்போது காங்கிரஸின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. ரூ.14 லட்சம் வருமான வரி பிரச்னைக்காக காங்கிரஸின் ஒட்டுமொத்த நிதியும் முடக்கம். தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்னர் வங்கி கணக்கு முடக்கம்; இது திட்டமிட்ட செயல். வங்கி கணக்கு முடக்கம் விவகாரத்தில் நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியாவின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் பாஜக அழித்துவிட்டது” என்று விமர்சித்திருந்தார்.
காங்கிரஸை பொறுத்த வரையில் இந்த தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எனவே, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளையும் இணைத்து இந்தியா கூட்டணி என்கிற பெயரில் தேர்தலை எதிர்கொள்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்திருக்கிறது. தென் மாநிலங்களில் ஓரளவு கோலோச்சினாலும், வட மாநிலங்களில் மீண்டும் கட்சி உயிர்த்தெழுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
இதற்கிடையில் இன்று தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாக இருக்கிறது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் களமிறங்குகிறது.
திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் கரூரில் ஜோதிமணிக்கும், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்திற்கும், விருதுநகரில் மாணிக்கம் தாகூருக்கும், குமரியில் விஜய் வசந்த்திற்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என கட்சியினர் எதிர்பார்த்திருக்கின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா ஓய்வு குறித்தும், உலகக்கோப்பை குறித்தும் சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.
ஹர்திக் ஏற்கெனவே மும்பை அணியில்தான் ஆடி வந்தார். இடையில் குஜராத் அணியால் வாங்கப்பட்டு கேப்டனாக்கப்பட்டார். முதல் சீசனிலேயே ஹர்திக் அந்த அணியைச் சாம்பியனாக்கியிருந்தார். இரண்டாவது சீசனில் ரன்னர் அப். இந்நிலையில், வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த ஹர்திக்கை மும்பை அணி ட்ரேடிங் முறையில் வாங்கியது. ரோஹித்தை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ஹர்திக்கை மும்பை அணியின் கேப்டனாகவும் அறிவித்தார்கள்.ஹர்திக் பாண்டியா
மார்ச் 22 ஆம் தேதியான நாளை முதல் ஐபிஎல் தொடங்கவிருக்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் வான்கடே மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா அவரது ஓய்வு குறித்தும், உலகக்கோப்பை குறித்தும் ஆங்கில ஊடகம் ஒன்றில் பேசியிருக்கிறார்.
“நான் இவ்வளவு நாள் ஓய்வில் இருந்ததற்குக் காரணம் ஐபிஎல்-காக இல்லை. ஐபிஎல் அதில் ஒரு பகுதியாக இருக்கலாம். ஐபிஎல்-க்கு பிறகு ஒரு பெரிய குழந்தையான உலகக் கோப்பையை மீண்டும் சந்திக்க வேண்டியுள்ளது. நான் உலக கோப்பைகளை என் குழந்தைகளாகவே எப்போதும் பார்க்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.ஹர்திக் பாண்டியா
கடந்த அக்டோபர், நவம்பரில் உலகக்கோப்பைத் தொடர் நடந்திருந்தது. இந்தத் தொடர் முழுவதும் ஆடிய ஹர்திக் தொடருக்குப் பிறகு காயத்தில் சிக்கினார். அதன்பிறகு காயம் காரணமாக பெரும்பாலான தொடர்களில் ஆடாமல் இருந்தார். இப்போது ஐ.பி.எல் தொடங்கவிருக்கும் நிலையில் முழு உடற்தகுதியையும் பெற்று மீண்டும் களத்தில் இறங்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.
13 முதல் கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளது.
ஏப்ரல் 19ஆம் தேதி 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக பள்ளிகளில் தேர்வு அட்டவணை உருவாக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் பள்ளிகளில் தான் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு கல்லூரிகளில் தான் பூட்டி வைக்கப்படும்.
இதனையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வு ஏப்ரல் 2 தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையடுத்து ஏப்.13 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.