கரூர்: கரூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க அதிகளவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று (ஆக.
14ம் தேதி) பொறுப்பேற்றுக் கொண்ட கே.பெரோஸ் கான் அப்துல்லா கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகஸ்ட் 8ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய கி.பிரபாகர், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கே.பெரோஸ் கான் அப்துல்லா கரூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கே.பெரோஸ் கான் அப்துல்லா இன்று (ஆக. 14ம் தேதி) காலை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அப்போது பேசிய கே.பெரோஸ் கான் அப்துல்லா கூறியதாவது: பொதுமக்கள், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். சட்டம், ஒழுங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்படும். குற்றங்களை தடுக்க அதிகளவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பெருகி வரும் இணைய வழி குற்றங்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கணினி வழி குற்றங்கள் பற்றி மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, புகார்கள் மீது முழு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். பொதுமக்களுக்கும், காவல் துறைக்கும் இடையே நட்புணர்வு பேணப்படும். கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள், சூதாட்டம் தொடர்பான புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் எந்த அச்சமுமின்றி காவல் நிலையங்களை அணுகலாம். காவல் நிலையங்களில் குறைகள் இருந்தால் உயர் அதிகாரிகளை உடனடியாக தொடர்புக் கொள்ளலாம். மாவட்ட காவல் கண்காணிப்பாளரை 94421 49290 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம். இவ்வாறு பெரோஸ் கான் அப்துல்லா கூறினார்.