தீபாவளிக்காக, அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபானங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, இருப்பு வைத்து, விற்பதற்காக 24 மணி நேரமும் பார்களை நடத்தும் தமிழ்நாடு அரசு
நெல் கொள்முதலை திட்டமிடாமல் விவசாயிகளை வஞ்சிப்பது ஏன்…?
இது டாஸ்மாக் அரசா ? அல்லது திராவிட மாடல் அரசா ? என விவசாயிகள் கேள்வி
நெல் விவசாயிகளை வஞ்சிப்பதில் தமிழ்நாட்டிற்கு நிகர் தமிழ்நாடுதான். தமிழ்நாட்டை விட நெல் உற்பத்தி செலவு 50 சதவீதம் குறைவாக உள்ள சட்டீஸ்கர் – ஒரிசா போன்ற மாநிலங்கள் மத்திய அரசு வழங்கக்கூடிய குவிண்டாலுக்கு ரூ. 2,369 உடன் ரூ. 731 கூடுதலாக வழங்கி விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3,100 வழங்கும்போது, தமிழ்நாடு அரசு வெறும் 131 ரூபாய் மட்டும் கூடுதலாக வழங்கி 2500 ரூபாய் மட்டுமே வழங்கி வருகிறது. அதுவும் 2021ல் வழங்குவதாக விவசாயிகளுக்கு வாக்குறுதி அளித்துவிட்டு 2025-ல் நான்கரை ஆண்டுகள் தாமதமாக வழங்கி இருக்கிறது.
சராசரியாக ஆண்டுதோறும் 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் தமிழ்நாட்டில், இந்த ஆண்டில் கூடுதலாக 2 லட்சம் மெட்ரிக் டன் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கும்போது, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கடந்த செப்டம்பர் 17 அன்று தமிழ்நாட்டில் 10 சதவீதம் நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட உரங்களை உடனடியாக வழங்குமாறு கடிதம் எழுதியுள்ள சூழ்நிலையில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தமிழக சட்டசபையில் 13 மடங்கு அதிகமாக நெல் வந்ததாக தவறான தகவலை தெரிவித்திருக்கிறார்.
1960-களில் இருந்து நெல் கொள்முதல் தமிழ்நாட்டில் நடந்து வரும் சூழ்நிலையில், இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் இதன் மீது உரிய கவனம் செலுத்தாதன் விளைவுதான் தற்போது வரை விவசாயிகள் சிரமப்பட்டு வருவதற்கு காரணமாகும்.
சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது கேள்வி கேட்பவர்கள், ஆளுங்கட்சியான பின்பு அதே நிலையை தொடர்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஆண்டுக்கு சராசரியாக 45 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்படும் தமிழ்நாட்டில், 7 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே பாதுகாப்பாக இருப்பு வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இதுதான் தற்போதைய அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாகும். குறைந்தபட்சம் மொத்த நெல் கொள்முதலில் 50% அளவிற்கு நெல்லை பாதுகாப்பாக வைக்க சேமிப்பு மையங்களை உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு தொடர்ச்சியாக நிதி ஒதுக்காததன் விளைவுதான் தற்போது விவசாயிகளின் இந்த அவல நிலைக்கு காரணமாகும்.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் நெல் சாகுபடி பரப்பளவு 5.13 லட்சம் ஹெக்டேர் ஆகும் . தற்போதைய நடப்பு ஆண்டின் நெல் சாகுபடி பரப்பளவு 5.66 லட்சம் ஹெக்டேர் ஆகும் . வெறும் பத்து சதவீதம் மட்டுமே நெல் சாகுபடி கூடுதலாக இருக்கும்போது, இது குறித்து எவ்வித திட்டமிடலும் இல்லாமல், தற்போது பிரச்சனை வந்த பின்பு சமாளிப்பதற்காக தவறான தகவல்களை சட்டசபையில் பதிவு செய்த அமைச்சர் சக்கரபாணி மீது தமிழக முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. இன்னும் புயல் மழை தொடங்கவில்லை. சாதாரண மழைக்கு நெல் கொள்முதல் நிலையங்களை நீர் சூழ்ந்து நிற்கிறது. விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை நனையாமல் வைப்பதற்காக தார்பாய்கள் இல்லை. கொள்முதல் செய்வதற்கு ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. ஈரப்பதமான நெல்லை உலர வைப்பதற்கு டிரையர் இயந்திரங்கள் இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் அரும்பாடுபட்டு கொண்டு வந்த நெல் கொள்முதல் செய்வதற்கு முன்பே முளைத்து வீணாகி வருகிறது. இதுவரை 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் முளைத்து வீணாகி உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 840 கோடி ரூபாய் மதிப்புள்ள கொள்முதல் செய்யப்பட்ட நெல் பாதுகாக்கப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்த 840 கோடி ரூபாயும் பொதுமக்கள் வரிப்பணம் என்பதை அதிகாரிகளும் அமைச்சரும் மறந்து விட்டார்கள் போலும்.
தமிழக முதல்வர் அவர்கள் நெல் கொள்முதல் குறித்து உரிய ஆய்வுக் கூட்டம் நடத்தியும், உரிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்ட பின்பும், இந்த அவல நிலை நிலவி வருவது விவசாயிகள் மீது இவர்கள் காட்டும் அக்கறையின்மையை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
தீபாவளி அன்று அதிகம் விற்பனையாகும் என்பதை முன்கூட்டியே கணித்து டாஸ்மாக்கில் அனைத்து வகை மதுபானங்களையும் போதுமான அளவு இருப்பு வைத்து, மது அருந்தக் கூடியவர்களுக்கு உரிய தின்பண்டங்களை வாங்கி வைக்கவும், வாகனங்களை நிறுத்தவும் உரிய ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்திய தமிழ்நாடு அரசு, நெல் கொள்முதலில் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறது என்பதை பார்க்கும் போது இந்த அரசு திராவிட மாடல் அரசா ? அல்லது டாஸ்மாக் மாடல் அரசா ? என்கிற சந்தேகம் சாதாரண பாமரனுக்கும் கூட ஏற்படுகிறது என்பதுதான் தற்போதைய ஹைலைட்.
நெல் கொள்முதலை தாமதப்படுத்தி, விவசாயிகளை அலைய வைத்து வேறு வழி இன்றி மிகக் குறைந்த விலைக்கு வியாபாரிகளுக்கு விற்கக்கூடிய சூழ்நிலைக்கு தமிழக அரசு விவசாயிகளை தள்ளி உள்ளது.
நெல் கொள்முதல், சாக்கு கொள்முதல், தார்ப்பாய் கொள்முதல், வாகனப் போக்குவரத்து என அனைத்திலுமே மிகக் கடுமையாக ஊழல் நிலவி வருவதால் இது போன்ற தாமதங்கள் ஏற்பட்டு வருகிறது என்பதுதான் தற்போதைய குற்றச்சாட்டாக உள்ளது.
மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சமாக வாங்க தெரிந்தவர்கள், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை பாதுகாப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.
எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உரிய நிதிகளை ஒதுக்கி, குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் 25 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் அளவிற்கு சேமிப்பு கிடங்குகளை ஏற்படுத்தியும், ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் அதிக ஆட்களை பணியமர்த்தி ஒரு நாளைக்கு 2,000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யும் அளவுக்கு உரிய நடவடிக்கைகள் எடுத்தும், கொள்முதல் செய்யப்படும் நெல்கள் தினசரி வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தியும், நெல் கொள்முதலில் விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி லஞ்சமாக பெறப்படும் ரூபாய் நாற்பதையும் நிறுத்தி, உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விவசாயிகள் விளைவித்த நெல்லை பாதுகாக்க முடியும். விவசாயத்தையும் பாதுகாக்க முடியும் விவசாயிகளையும் காக்க முடியும் என்பதே மறுக்க முடியாத உண்மை.