
கரூரில் மர்ம கும்பல் ஒன்று காரில் சென்றபடி, சாலையில் செல்வோரிடம் நகைகளை பறித்து வழிபறியில் ஈடுபட்டு தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் கரூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த சம்பவ தொடர்பாக கரூர் மாவட்ட போலீஸார் அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.கொள்ளையர்களை விரட்டி பிடித்த எஸ்பி
இந்நிலையில் நாகப்பட்டினம் எஸ்.பி ஹர்ஷ்சிங் நாகை மாவட்ட போலீஸாரை உஷார் படுத்தியிருந்தார். காரில் வழிப்பறி செய்த கும்பல் குறித்து நாகை போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த கும்பல் வேளாங்கண்ணியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைதொடர்ந்து எஸ்.பி ஹர்ஷ்சிங் தலைமையில் தனிப்படை போலீஸார், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மற்றும் அதிவிரைவுப்படை உள்ளிட்ட போலீஸார் நான்கு பிரிவுகளாக பிரிந்து மர்மகும்பல் தங்கியிருந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.
இதை மோப்பம் பிடித்த மர்ம கும்பல், டாடா சுமோ காரில் தப்பித்து சென்றனர். இதையடுத்து எஸ்.பி ஹர்ஷ் சிங், பக்கத்தும் மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கும், மாவட்ட எல்லையில் உள்ள காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்ததுடன் காரில் தப்பி சென்ற வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க காரில் விரட்டி சென்றார்.பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதம்
கொள்ளையர்கள் சற்றும் சளைக்காமல் எஸ்.பிக்கு போக்கு காட்டி சென்றனர். சினிமா பாணியில் நடந்த இந்த சேஸிங்கில் 35 கிலோ மீட்டர் எஸ்.பி ஹர்ஷ் சிங் தலைமையில் போலீஸார் விரட்டி சென்று திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் கொள்ளையர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை திருவாரூர் மாவட்ட போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிக்கியவர்கள் மதுரையை சேர்ந்த கண்ணன் (23), பக்ருதீன் (33), பாண்டியன் (31), சிவகங்கையை சேர்ந்த அஸ்வின் (30), தஞ்சாவூரை சேர்ந்த ராஜேஸ் (33) ஆகிய ஐந்து பேர் எனவும் கரூரில் வழிப்பறியில் ஈடுப்பட்டதையும் ஒப்புக்கொண்டனர். மேலும் இவர்கள் கும்பலாக காரில் சென்று பல மாவட்டங்களில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. கொள்ளை கும்பலிடம் திருவாரூர் மாவட்ட போலீஸார் விசாரணை முடிந்த பிறகு கரூர் மாவட்ட போலீஸாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.கார்
கரூரில் கொள்ளையடித்து விட்டு காரின் நம்பேர் பிளேட்டை மாற்றிக்கொண்டு வேளாங்கண்ணி வந்து தங்கி விட்டனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை ஃபாலோ செய்ததை அறிந்து கொண்ட கொள்ளையர்கள் காரில் தப்பி சென்ற போது காரில் விரட்டி சென்று பிடித்ததாகவும், கொள்ளைர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்திருப்பதாகவும் நாகை போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். 35 கிலோ மீட்டர் விரட்டி சென்று கொள்ளையர்களை பிடித்த நாகை எஸ்பி ஹர்ஷ்சிங் டீமை போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.