மதுரை ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அச்சு ஊடக செய்தியாளர்களுக்கு தனி அறை ஒதுக்கீடு செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்களிடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கத்தின் மாநில தலைவர் சரவணன் அறிவுறுத்தலின் பேரில் மதுரை மாவட்ட தலைவர் கணேஷ், செயலாளர் ரவிச்சந்திர பாண்டியன், பொருளாளர் கவிதா ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு பத்திரிகை துறையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கின்ற பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடத்தில் ஏற்கனவே செய்தியாளர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த அறை முழுவதும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு மட்டும் போதுமானதாக உள்ளது.
அச்சு ஊடக செய்தியாளர்களுக்கு இடவசதி குறைவால் அந்த அறையை பயன்படுத்த முடியாத நிலையில் பழைய செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் அருகில் உள்ள மரத்தடியில் நின்று செய்தி சேகரித்து வருகின்றனர்.
மேலும் மழைக்காலங்களில் செய்தியாளர்கள் இடம் தேடி அலைய வேண்டி உள்ளது. எனவே அச்சு ஊடக செய்தியாளர்கள் பயன்படுத்துகின்ற வகையில் பழைய செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் அல்லது புவியியல் கனிம வளத்துறை அலுவலகத்தை ஒதுக்கீடு செய்து தரும்படி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் சங்கீதா தனி அறை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதில் துணைச் செயலாளர்கள் சுரேஷ், முருகேசன், புஷ்பராஜ், இணைச் செயலாளர் பாண்டியன், செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திக், நாகேந்திரன், ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள் மாயகிருஷ்ணன், அல்லா பக்ஸ்,, ராமர், மூர்த்தி, சண்முகவேல், உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.