சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பல லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கோபிநாதம்பட்டி பூச்சோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.6 லட்சத்து 94 ஆயிரம் பணத்தை கைப்பற்றினர்.
விசாரணையில் ஜோலார் பேட்டையை சேர்ந்த பீடி தொழில் செய்து வரும் ஞானசேகரன் என்பதும் சேலத்தில் வியாபாரத்தை முடித்துவிட்டு திரும்பி கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து கைப்பற்றப்பட்ட பணம் அரசு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. கோபி அருகே நம்பியூர் சோதனை சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.
மலையம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார் திருப்பூரில் பழைய கார்களை விற்பனை செய்த பணத்தை கொண்டு செல்லும் போது பிடிபட்டது தெரியவந்தது. சிவகங்கை இளையான் குடி சந்திப்பு சாலையில் அம்பேத்கர் சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த நிலையான கண்காணிப்பு குழுவினரிடம் உரிய ஆவணமின்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.83 பணம் சிக்கியது. கோவை மாவட்டம் பல்லடம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி முட்டை வியாபாரி கொண்டு சென்ற ரூ.76 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.
விசாரணையில் சிங்காநல்லூரை சேர்ந்த அனிஷ் மற்றும் ஜேசுராஜ் என்பது தெரியவந்தது. திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி அடுத்த நெடூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இரு சக்கர வாகனத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.70 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர் இதே போல் ஆரணியில் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம் உளுந்தூர் பேட்டை சாலையில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன தணிக்கையில் அனுமதியின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 220 மதுபாட்டில்கள் சிக்கின. அதிகாரிகள் சோதனை நடத்தி கொண்டிருக்கும் போதே காரில் இருந்த இருவர் தப்பி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எவ்வித ஆவணங்கள் இன்றி லோடு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 250 ஹாட் பாக்ஸ்களை தேர்தல் பறக்கும் படை கைப்பற்றியது.