தமிழ்நாடு டிஜிபி நியமனம்
உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது அவமதிப்பு வழக்கு
இந்தியப் பணியாளர் தேர்வாணையம் பட்டியல் அனுப்பியும் நிரந்தர டிஜிபி நியமிக்கப் படாததை எதிர்த்து வழக்கு.
தமிழ்நாடு காவல்துறை இயக்குனராக – டிஜிபியாக பதவியில் இருந்த சங்கர் ஜிவால் அவர்களின் பணிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதி நாளோடு நிறைவு பெற்றது.
முன்னதாக தகுதி வாய்ந்த டிஜிபி அதிகாரிகள் பட்டியலை 3 மாதத்திற்கு முன்னதாகவே யு பி எஸ் சி என்று அழைக்கப்படும் இந்தியப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழ்நாடு அரசு அனுப்பி இருக்க வேண்டும்.
அதில் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து தமிழ்நாடு அரசுக்கு யுபிஎஸ்சி பரிந்துரை செய்திருக்கும்.
இதுதான் விதிமுறை.
ஆனால் ஆகஸ்ட் மாதம் இறுதியில்தான் இந்தப் பட்டியலைத் தமிழ்நாடு அரசு இந்தியப் பணியாளர் தேர்வு ஆணையத்திற்கு அனுப்பியது.
முன்னதாக தற்காலிக டிஜிபி நியமிக்கப்பட்ட கூடாது, தகுதி வாய்ந்த டிஜிபிக்கள் யூபிஎஸ்சி மூலமாகத் தேர்ந்தெடுத்து நியமிக்கப்பட வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
அந்த வழக்கில் யுபிஎஸ்சி மூலமாக முறையாக டிஜிபி நியமிக்கப் பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையில் தற்காலிக டிஜிபியாக திரு வெங்கட்ராமன் அவர்களைத் தமிழ்நாடு அரசு நியமித்தது.
இது நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி மூத்த வழக்கறிஞரும் மக்கள் கண்காணிப்பகத் தலைவருமான ஹென்றி டிபேன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள பட்டியலில் இருந்து மூன்று பேரைத் தேர்ந்தெடுத்துப் பரிந்துரை செய்யுமாறு உத்தரவிட்டது.
இதையடுத்துக் கூடிய யுபிஎஸ்சியின் தேர்வுக் குழு மூன்று பேர் கொண்ட பட்டியலை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியது.
ஆனால் அந்தப் பட்டியல் அடிப்படையில் இன்று வரை நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவில்லை. மாறாக தற்காலிக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் அவர்களே பதவியில் நீடித்து வருகிறார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, உச்ச நீதிமன்றம் ஆகியவை உத்தரவிட்டும், உத்தரவின் பேரில் யுபிஎஸ்சி 3 பேரை தேர்வு செய்து அனுப்பியும் இதுவரை நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவில்லை.
இதுவும் நீதிமன்ற அவமதிப்புதான் என்று சுட்டிக்காட்டி இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார் ஹென்றி டிபேன்.
இதுகுறித்து ஹென்றி டிபேன் எமது செய்தியாளரிடம் கூறியது, ” டிஜிபி தேர்ந்தெடுப்பதில் உச்ச நீதிமன்றம் தெளிவான வழிமுறைக் காட்டியுள்ள நிலையில் அதைத் தமிழ்நாடு அரசு பின்பற்றாமல் இருக்கிறது. மேலும் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கின் போது உறுதிப்படுத்தப்பட்ட விதிமுறைகளையும் நடைமுறைகளையும்கூடப் பின்பற்ற மறுக்கிறது. இது முழுக்க முழுக்க நீதிமன்ற அவமதிப்புதான்.” என்று குறிப்பிட்டார்.
ஏற்கனவே கரூர் நெரிசல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது
தற்போது டிஜிபி நியமன வழக்கில் இரண்டாவது அவமதிப்பு வழக்கை தமிழ்நாடு அரசும் காவல் துறையும் சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கத#டிஜிபி #தமிழ்நாடு #உச்சநீதிமன்றம்


