Friday , November 22 2024
Breaking News
Home / Politics / தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை திட்டத்தில் வழங்க வேண்டிய ரூ.2697 கோடி நிலுவைத் தொகையை வழங்கிட ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!
MyHoster

தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை திட்டத்தில் வழங்க வேண்டிய ரூ.2697 கோடி நிலுவைத் தொகையை வழங்கிட ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை திட்டத்தில் வழங்க வேண்டிய ரூ.2697 கோடி நிலுவைத் தொகையை வழங்கிட ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

சென்னை : தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை திட்டத்தில் வழங்க வேண்டிய ரூ.2697 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிய வேண்டும் என்று ஒன்றிய தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கிராமப்புறங்களில் உள்ள முதியோர்கள், ஆதரவற்ற பெண்கள், குடும்பத் தலைவிகள், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு முக்கியமானதொரு வாழ்வாதாரமாகவும், குறிப்பாக விவசாயம் நலிவடைந்த பருவத்தில், கிராமப்புறங்களில் உள்ள பலருக்கு கூடுதல் வாழ்வாதார வாய்ப்பாகவும் கருதப்படுகிறது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், இந்தத் திட்டத்தில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் பெண்களாக இருப்பதாலும், அவர்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படுவதாலும், அவர்களின் நிதிநிலை மற்றும் வாழ்வாதாரம் பெரிதும் மேம்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில், 2023-2024 ஆம் ஆண்டில் 40 கோடி மனித நாட்கள் தேவைப்படும் நிலையில், இதுவரை, 28 கோடி மனித நாட்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், 23-10-2023 வரை, 66.26 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 76.06 இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியதன் மூலம், தமிழ்நாடு 31.15 கோடி மனித நாட்களை எட்டியுள்ளதாகவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். 2023-2024 நிதியாண்டில், 19-7-2023 வரை, தொழிலாளர்களுக்கு திறன்சாரா ஊதியத்திற்காக ரூ.4,903.25 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து 25-9-2023 அன்று 1,755.43 கோடி ரூபாய், திறன்சாரா ஊதியம் வழங்குவதற்காக ஒன்றிய அரசால் ஒப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், எனினும் அனுமதிக்கப்பட்ட தொகையில் ரூ.418.23 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள ரூ.1,337.20 கோடி, தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதோடு, அதற்குப்பிறகான வாரங்களுக்கான ஊதியத்திற்கான ரூ.1,359.57 கோடி நிலுவைத் தொகையும் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், 20-10-2023 நிலவரப்படி, தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் ஊதிய நிலுவை ரூ.2,696.77 கோடி என்றும் முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 17-10-2023 அன்று, செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு தான் ஆய்வுப் பயணம் மேற்கொண்டபோது, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டுமென்று பொது மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாகவும், இதேபோன்ற கோரிக்கை திருவண்ணாமலை மாவட்ட ஆய்வுப் பயணத்தின் போதும் தமக்கு வந்ததாகவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மேற்குறிப்பிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,696.77 கோடி மொத்த ஊதிய நிலுவைக்கான தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று ஒன்றிய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளதோடு, திறன்சாரா தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து கூடுதல் நிதி விடுவிக்கப்பட வேண்டுமென்றும் தனது கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

About Admin

Check Also

New Title

News News

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES