எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக உருவாக்கி உள்ள இண்டியா கூட்டணி தங்களின் அடுத்த கட்ட தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன.
குறிப்பாக காங்கிரஸ் மற்றும் கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து கடந்த முறை டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த விவாதத்தின் போது பிராந்திய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்வதற்கான குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்யவேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா உள்ளிட்டோர் வலியுறுத்தினார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று காங்கிரஸ் மாநில பொறுப்பாளர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாநில கட்சிகளுடனான தொகுதி பங்கீடு, வரும் 14 முதல் மார்ச் 20 ஆம் தேதி வரை நடைபெறும் ராகுல் காந்தியின் யாத்திரை ஏற்பாடுகள், நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.