எதிர்க்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவி கொடுக்கபடும் என்றால், லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரை ஆதரிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பாண்மை கிடைக்காத நிலையில், பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 3-வது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ளது. அதேசமயம் காங்கிஸ் தலைமையில் வலுவான எதிர்கட்சி அமைந்துள்ளதால், தற்போது சபாநாயகர் தேர்தலில் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களவையில் இதுவரை சபாநாயகர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது, ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினர் இடையே சபாநாயகர் பதவிக்கான போட்டி ஏற்பட்டுள்ளது. இதனிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் சிலவற்றை அரசாங்கம் அணுகியுள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று (ஜூன் 24) மாலை காங்கிரஸ் தலைவரும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கேவைத் தொடர்பு பேசியதாக ராகுல்காந்தி கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை அரசு வழங்கினால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளரை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக கார்கே ராஜநாத்சிங்கிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதேபோல், கடந்தமுறை மக்களவையில், சபாநாயகராக இருந்த ஓம் பிர்லாவை மீண்டும் என்.டி.ஏ., சபாநாயகர் நிறுத்தவுள்ளது தெரிந்துகொண்ட ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார். ராஜ்நாத் சிங் கார்கேவிடம் பேசி ஆதரவு கோரினார். ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும், நாங்கள் அனைவரிடமும் பேசினோம், நாங்கள் (என்.டி.ஏ வேட்பாளரை) ஆதரிப்போம் என்று கூறியுள்ளோம், ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடிய ராகுல்காந்தி, மோடியின் செயல் அவரது வார்த்தைகளுக்கு ஒத்துவரவில்லை. ராஜ்நாத் சிங் நேற்று மாலை கார்கே ஜிக்கு அழைப்பைத் திருப்பித் தருவதாகக் கூறினார். அவர் இன்னும் அழைப்பைத் திரும்பப் பெறவில்லை. மோடி ஜி ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு பற்றி பேசுகிறார். பின்னர் அவர்கள் எங்கள் தலைவரை அவமதிக்கிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி ஏதோ சொல்கிறார், இன்னொன்றை செய்கிறார். அதுதான் அவருடைய ஃபார்முலா. அதுதான் அவருடைய உத்தி. அவர் அதை மாற்ற வேண்டும். பிரதமரின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை என்பது முழு நாட்டிற்கும் தெரியும். அரசாங்கத்தின் நோக்கம் தெளிவாக இல்லை. நரேந்திர மோடி எந்த ஆக்கபூர்வமான ஒத்துழைப்பையும் விரும்பவில்லை. ஏனென்றால், துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிக்கே போக வேண்டும் என்று நாங்கள் கூறியுள்ளோம். மறபை பின்பற்றினால், சபாநாயகர் தேர்தலில் ஆதரவு அளிப்போம் என ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கூறியுள்ளன.