சென்னை: செல்வப்பெருந்தகையை ரௌடிகள் பட்டியலில் இருந்தவர் என அண்ணாமலை பேசிய விவகாரம் பெரிய சர்ச்சையாகியுள்ள நிலையில், செல்வப்பெருந்தகை புகாரில் போலீசார் அண்ணாமலையை கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.
இதனால் அண்ணாமலை லண்டன் செல்வதிலும் சிக்கல் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் கட்சித் தலைவர்களை மிரட்டி வருவதாக கூறியதோடு, பாஜகவில் உள்ள ரவுடிகள் பட்டியல் மற்றும் அவர்கள் மீது உள்ள வழக்கு விவரங்களை வெளியிட்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்ணாமலை செல்வப்பெருந்தகையே குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் தான் எனக் கூறி இருந்தார்.
அதற்கு செல்வப்பெருந்தகை கடுமையாக எதிர்வினை ஆற்றினார். எனது பெயர் குற்றப் பதிவேடு பட்டியலிலும் ரவுடிகள் பட்டியலிலும் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். உண்மைக்குப் புறம்பாகவும் அவதூறாகவும் பேசினால் என்ன வழக்கு வரும் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு தெரியாதா?
என்னை ரவுடி எனக் கூறும் அண்ணாமலை எந்த காவல்நிலையில் என்ன வழக்கு என் மீது உள்ளது என நிரூபிக்க முடியாமா? என்னை அவதூறாகப் பேசியதற்கு அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இது கடைசி எச்சரிக்கை. மன்னிப்புக் கேட்காவிட்டால், அவதூறு வழக்கும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு தொடரப்படும்” என்று எச்சரித்திருந்தார்.
இதையடுத்து, செல்வப்பெருந்தகை மீது உள்ள வழக்குகள் குறித்த பட்டியலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் அண்ணாமலை. 2003 வழக்கு எண் 451/2003 இபிகோ 324 – பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், இபிகோ 506 – கொலை மிரட்டல், வெடிபொருள்கள், 1908. இந்த வழக்கில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் செல்வப்பெருந்தகை என அண்ணாமலை தெரிவித்தார்.
செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை. செல்வப்பெருந்தகை எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
அண்ணாமலை – செல்வப்பெருந்தகை இடையேயான வார்த்தைப் போர் தொடர்ந்து வருவது தமிழக அரசியல் களத்தை சூடாக்கி வருகிறது. காங்கிரஸ் கட்சியினர் அண்ணாமலைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், செல்வப்பெருந்தகையிடம் இருந்து, தமிழக காவல்துறை புகார் ஒன்றை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தன்னை அவதூறாகப் பேசியதற்கு அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்காவிட்டால் எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு தொடர்வேன் என செல்வப்பெருந்தகை எச்சரித்த நிலையில், அண்ணாமலை, மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதால், அண்ணாமலை மீது செல்வப்பெருந்தகை போலீசில் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது.
செல்வப்பெருந்தகையின் புகாரின் பேரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்படலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. அண்ணாமலை வரும் செப்டம்பர் மாதம் லண்டன் சென்று அங்கு 6 மாதங்கள் தங்கி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிக்க இருக்கிறார். இந்நிலையில், செல்வப்பெருந்தகை விவகாரத்தில் அண்ணாமலை கைது செய்யப்பட்டால் அவர் லண்டன் செல்வதிலும் பெரிய சிக்கல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.