Wednesday , November 19 2025
Breaking News
Home / Politics / வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் – எங்கு? எப்போது? – விவரம் !
MyHoster

வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் – எங்கு? எப்போது? – விவரம் !

வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் - எங்கு? எப்போது? - விவரம் !

நாடாளுமன்ற தேர்தல் முடிந்து 2024 – 2025-க்கான பட்ஜெட் கடந்த ஜூலை 23-ம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்கள், பாஜக கூட்டணியான பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களே இடம்பெற்றது. மேலும் அந்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், டெல்லி போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவே இல்லை. வெள்ள பாதிப்பு நிவாரணம், மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்கு நிதி என தமிழ்நாடு எம்.பி-க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், சுத்தமாக ஓரங்கட்டியுள்ளது ஒன்றிய பாஜக அரசு. பாஜக அரசின் இந்த பாரபட்சமான செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியமைந்து நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த முதல் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீட்டில் அப்பட்டமான அரசியல் பாகுபாடு காட்டப்பட்டதாக கடும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக தமிழகம் வஞ்சிக்கப்பட்டதால் வருகிற ஜூலை 27 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடக்க இருந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக அறிவித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

அதேபோல, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த மாநில முதலமைச்சர்களும் தொடர்ந்து புறக்கணிப்பை அறிவித்திருக்கிறார்கள். நிதிநிலை அறிக்கையில் பீகார் மாநிலத்திற்கு ரூ.59,000 கோடியும், ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.15,000 கோடியும் வழங்கப்பட்டு தமிழகம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு வழங்கிய மொத்த ஜி.எஸ்.டி. தொகை ரூ.12,210 கோடி. ஆனால், தமிழகத்திற்கு சல்லிக் காசு கூட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. அதற்கு முற்றிலும் மாறாக ரூ.1992 கோடி ஜி.எஸ்.டி. தொகை வழங்கிய பீகார் மாநிலத்திற்கு வழங்கிய தொகை ரூ.59,000 கோடி. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு வெள்ள நிவாரண நிதியாக கேட்ட தொகை ரூ.37,000 கோடி. ஆனால் வழங்கியதோ ரூ.276 கோடி.

அதேநேரத்தில் பீகாருக்கு வெள்ள தடுப்பு பணிகளுக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தோடு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கும், தாம்பரம் – செங்கல்பட்டு விரைவு மேம்பால திட்டத்திற்கும் ஒப்புதலும், நிதியும் தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதி கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், தமிழகத்தை வஞ்சிப்பத்தை நோக்கமாகக் கொண்டு காழ்ப்புணர்ச்சியோடு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கூட்டணி அமைத்து தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் வஞ்சித்திருக்கிறார்கள். இத்தகைய தமிழக விரோத போக்கை அரசியல் பேராண்மையோடு தமிழக முதலமைச்சர் எதிர்த்து கண்டன குரல் எழுப்பியிருப்பதை வரவேற்கிறேன். இத்தகைய போக்கு கூட்டாட்சி அமைப்பிற்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. மற்ற மாநிலங்களில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்து திறக்கப்பட்டு விட்டன. ஆனால், கடந்த 2019, ஜனவரியில் மதுரை தோப்பூரில் ரூ.2600 கோடி முதலீட்டில் தொடங்குவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, சுற்றுச்சுவர் எழுப்பியதை தவிர ஒரு செங்கல் கூட வைக்கவில்லை. நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறக்கிற பிரதமர் மோடி, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பு நடத்துவதை விட அப்பட்டமான தமிழக விரோத போக்கு வேறு எதுவும் இருக்க முடியாது.

கடந்த 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவை தேர்தல் என அனைத்திலும் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காமல் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் புறக்கணித்ததை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க., தமிழக மக்களை ஒட்டுமொத்தமாக வஞ்சித்து வருகிறது. பா.ஜ.க. கட்சியின் சார்பாக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் பதவியேற்ற பிறகு அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக அவர் இருக்க வேண்டும்.

ஆனால், அதற்கு மாறாக தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் ஒன்றிய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி, தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து நாளை (27.7.2024) சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் அருகில், தாராபூர் டவர் முன்பாக சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில், எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதேபோல, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் ஒன்றிய அரசின் தமிழகத்தை வஞ்சிக்கிற போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், காங்கிரஸ் முன்னோடிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் இந்நாள்- முன்னாள் உறுப்பினர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மோடி அரசின் நிதிநிலை அறிக்கை மூலமாக நிதி ஒதுக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கிற போக்கை கண்டித்து நடைபெறுகிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

About Admin

Check Also

iew(opens in a new tab)Publish

Change block type or style Change text alignment Displays more block tools வணக்கம் தங்க நகைகளுக்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES