பும்ரா, ஷைனி, தாக்கூரின் அபாரமான பந்துவீச்சு, ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றால் மவுன்ட் மவுங்கனியில் நடந்த 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொடரை வென்றது இந்திய அணி.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. 164 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்து 7 ரன்களில் தோல்வி அடைந்தது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணி டி20 போட்டியில் தொடர்ந்து பெறும் 8-வது வெற்றியாகும்.
4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தத் தொடரில் 224 ரன்கள் சேர்த்த ராகுல் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். தாக்கூர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கேப்டன் விராட் கோலி இல்லாத நிலையில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணியில் அவரும் காயத்தால் வெளியேறவே ராகுல் தலைமையில் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்திய அணி அபாரமாகக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.
இந்திய அணி மூன்றாவது முறையாக எதிரணியை டி20 தொடரில் வொயிட்வாஷ் செய்துள்ளது. இதற்கு முன் 2019-ல் மே.இ.தீவுகள் அணியை 3-0 என்ற கணக்கிலும், 2016-ல் ஆஸ்திரேலியாவை 3-0 என்ற கணக்கிலும் வொயிட் வாஷ் செய்தது. ஆனால் முதல் முறையாக 5-0 என்ற கணக்கில் வொயிட் வாஷ் செய்தது இதுதான் முதல் முறையாகும்.
நியூஸிலாந்து மண்ணில் இதுவரை பயணம் செய்துள்ள இந்திய அணி ஒருமுறை கூட டி20 தொடரை வென்றதில்லை என்ற பெயருடன் இந்தமுறை நியூஸி.மண்ணில் கால் பதித்தது. ஆனால், கோலிப் படையின் ஆர்ப்பரிப்பான ஆட்டத்தால், அந்தக் குறை நீங்கி புதிய வரலாற்றைப் பதிவு செய்தது.
இங்கு வந்தபோது 3-8 என்ற கணக்கில் டி20 தொடரில் இந்தியா, பின்தங்கி இருந்தது. ஆனால், தொடரை முடிக்கும்போது, நியூஸிலாந்துக்கு இணையாக 8-8 என்ற கணக்கில் இந்திய அணி முடித்துள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தவரை இந்தத் தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் உலகத்தரம் என்பதை நிரூபித்தனர். இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் டி20 உலகக்கோப்பைக்கு இந்த வெற்றி இந்திய அணியை மேலும் கூர்மைப்படுத்தும்.