Saturday , April 26 2025
Breaking News
Home / கரூர் / கரூர் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி வளர்ச்சி பணிகள்,அரசியல், நாடாளுமன்ற செயல்பாடுகளில் பணியாற்ற ஒரு வாய்ப்பு
MyHoster

கரூர் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி வளர்ச்சி பணிகள்,அரசியல், நாடாளுமன்ற செயல்பாடுகளில் பணியாற்ற ஒரு வாய்ப்பு

கரூர் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி வளர்ச்சி பணிகள்,அரசியல், நாடாளுமன்ற செயல்பாடுகளில் பணியாற்ற ஒரு வாய்ப்பு – விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

15 ஆண்டுகளுக்கு முன்பு இளம் அரசியல் தலைவர்களுக்கான பயணம் ஒன்றிற்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அங்கு அமெரிக்காவின் இருபெரும் கட்சிகளான ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள்,செனட்டர்கள்(நமது ஊரில் எம்.பி என்று சொல்லலாம்) ,ஹவுஸ் ஆப் ரெப்ரசென்டேட்டிவ்( எம் எல் ஏ) என்று பலரோடு உரையாட, அவர்கள் பணிகளைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு நல்ல அனுபவம். அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகம் மற்றும் களப்பணிகளில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இதுபோன்ற இண்டர்ன்ஷிப் வாய்ப்புகள் வழங்கப்படுவதைப் பார்த்தேன். அரசியல்,அரசாங்கம்,களப்பணிகள்,பல துறைகளில் பணியாற்றுபவர்களின் தொடர்பு, தங்கள் புதுமையான யோசனைகளை செயல்படுத்திப் பார்க்கும் வாய்ப்பு என்று இந்த வாய்ப்பு பல்வேறு வாயில்களை விரியத்திறப்பதை உணர்ந்தேன்.

மேலும் அரசியல் தளத்தில்,மக்களோடு பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு, இது போன்ற வாய்ப்புகள் ஒரு முதற்படியாகவும் அமைகின்றன. இப்படி தொடங்கிய பலர் அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்று மக்கள் பிரதிநிதிகளாகவும் இருக்கின்றனர். அரசியலுக்கு வர விரும்பாமல் வேறு துறைகளில் பயணிக்க விரும்புவர்களுக்கும் இந்த வாய்ப்பு மிகச்சிறப்பான அனுபவங்களை அளிக்கிறது. மக்கள் பிரதிநிதிகளுக்கும், மாணவர்கள்,இளைஞர்களின் புதிய அணுகுமுறைகளை,சிந்தனைகளை அறிந்துகொண்டு செயல்படுத்த இது ஒரு நல்வாய்ப்பு.

ஏன் இது போன்ற வாய்ப்புகள் நமது நாட்டில் உள்ளவர்களுக்கு கிடைப்பதில்லை என்று அப்பொழுது யோசித்தேன். நான் நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு டெல்லியில் பிஆர்எஸ் (PRS Legislative) போன்ற அமைப்புகள் இம்மாதிரியான சிறப்பான வாய்ப்பை வழங்கி வருவதை அறிந்தேன். ஆனால் இதில் பெரும்பாலும் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள், சமூகத்தின் உயர் மட்டத்தில் இருப்பவர்கள், ஐ,ஏ,எஸ் ,ஐ பி எஸ் போன்ற குடிமைப்பணித்தேர்வை எழுத விரும்புபவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்புவர்கள் இவர்களுக்கு மட்டுமே இதுபோன்ற வாய்ப்புகள் தெரிந்திருக்கின்றன. சாதாரணமான,எளிய குடும்ப, சமூகப் பின்னணியில் இருந்து வருகின்ற மாணவர்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் இருப்பதே தெரிவதில்லை. மேலும் அவர்கள் களப்பணியில் ஈடுபடும் வாய்ப்பும் கிடைப்பதில்லை.

தமிழகத்தில் இதுபோன்ற ஒரு வாய்ப்பை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. இதன் முதற்கட்டமாக எனது நாடாளுமன்ற பணிகளில், களப்பணிகளில், அரசியல் பணிகளில் ஆர்வமும், விருப்பமும் உள்ள மாணவர்கள்,இளைஞர்களுக்கு எனது தொகுதி மற்றும் நாடாளுமன்ற செயல்பாடுகளில் பணியாற்றும் வாய்ப்பை வழங்கலாம் என்று முடிவு செய்து,கடந்த ஆண்டு இதற்கான அறிவிப்பை வெளியிட்டோம்.மூன்றே நாட்களில் 1300 விண்ணப்பங்கள் வந்து குவிந்தன .அதில் 98 நபர்களைத் தேர்ந்தெடுத்து ஒரு நாள் பயிற்சி முகாமை நடத்தினோம், பிறகு அதிலிருந்து fellowship/ Internship ற்காக 50 நபர்களை தேர்ந்தெடுத்தோம். 27 பேர் தங்கள் பயிற்சியை சிறப்பாக நிறைவு செய்துள்ளனர்.

மாணவர்கள், இளைஞர்களின் ஆர்வமும், திறமையும், புதிய சிந்தனைகளும், உழைப்பும் இந்த முயற்சியை நாங்களே எதிர்பார்த்திராத ஒரு உயர்த்த தளத்திற்கு எடுத்துச் சென்றது. நீண்ட காலமாக இப்படியொரு நல் வாய்ப்பிற்காக மாணவர்களும், இளைஞர்களும் காத்திருந்திருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது, அப்படி ஒரு வாய்ப்பை இந்தியாவிலே முதல் முறையாக எங்களால் வழங்க முடிந்ததில் மகிழ்ச்சி. இந்த முயற்சியை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் மகத்தான ஆதரவு கிடைத்தது. அவர்கள் அனைவரையும் இந்த தருணத்தில் நன்றியோடு நினைவுகூர்கிறோம், இந்த ஆண்டும் ஆர்வமுள்ள மாணவர்கள், இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்த பணியின் போது வழங்கப்படும் சான்றிதழ்கள்,பணி அனுபவம் மேற்படிப்புகள், வேலைவாய்ப்புகளில் கவனிக்கப்படும்.

இது ஒரு சிறப்பான வாய்ப்பு. விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள், இளைஞர்கள் இந்த சிறப்பான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி
செ.ஜோதிமணி
நாடாளுமன்ற உறுப்பினர்,கரூர்

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES